தமிழகத்தில் நடந்த முடிந்த தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக வருகிற 7ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். அதேவேளையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்தும் இதர கட்சியினரும் போட்டியிட்டனர்.
அதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்யிட்டு வெற்றிபெற்ற விஜய் வசந்த் அவர்கள், சென்னை பெரியார் திடலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் திரவிடர் கழக தலைவர் கி. வீரமணி ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துபெற்றார்.
இந்த சந்திப்பின்போது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், ஈரோடு கிழக்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ஈவேரா திருமகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகப் பிரிவின் தலைவர் கோபண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.காமராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எம்.ஜி ராமச்சாமி, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சக்தி கண்ணன், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தணிகாசலம், தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெர்னாட் ஜான்சன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் தணிகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக சென்னை தி.நகரில் உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களின் இல்லத்தில் திருப்பத்தூர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் முருகன் ஏற்பாட்டில் ஆள் உயர மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினர்.