“கூட்டணி என்பது இருவர் பேசும் விசயம் என்றும் அந்த விசயத்தில் எடுக்கும் முடிவுகள் யாருக்கும் தெரியாது” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தலைப் பொறுத்தவரை வியூகத்திற்கு எல்லாம் இடமில்லை. அதிமுக - பாஜக கூட்டணியில் முதல்வராக பழனிசாமியையும் பிரதமராக மோடியையும் முன்னிறுத்தி தான் இதுவரை நடந்த தேர்தலில் கூட்டணி இருந்துள்ளது. இந்த நிமிடம் வரை அந்த நிலையில் தான் உள்ளோம். கூட்டணி குறித்து அவர்கள் இருவரும் பேசும் விஷயம். அதில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் யாருக்கும் தெரியாது.
பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இருக்கிறது என்பதை, வரவு செலவு கணக்குகளை அங்கீகரித்து தங்களின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததன் வாயிலாக தேர்தல் ஆணையமே அங்கீகரித்துள்ளது. ஜி20 மாநாட்டிற்கு மோடி பழனிசாமியை அழைத்ததன் வாயிலாக அவரும் அங்கீகரித்துள்ளார்.
பாஜக அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது எனச் சொல்கிறார்கள். அப்படி இல்லை. கூட்டணியில் முதல் இடம் இரண்டாம் இடம் என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் கூறினார்.