
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை மற்றும் மூவேந்தன் என்ற 3 நபர்கள் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இத்தகைய சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கை நடைபெற்றது. அப்போது சாராய வியாபாரியான ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கடந்த 14.02.2025 அன்று ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து சாராய விற்பனை செய்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது தினேஷ் சிறுவன், “ஏன் தெருவில் சாராயம் விற்கிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் சிறுவனை தாக்கினர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளைஞர் ஹரிஷ் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஹரிசக்தியும் தட்டிக்கேட்டனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகளான ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் ஹரிஷ், ஹரி சக்தி ஆகிய இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் இந்த இளைஞர்கள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த சம்பவத்தில் அதற்கு முன்னரே பலமுறை காவல்துறையில் சாராய விற்பனை குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தப் பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 19 போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.