கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு, கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நுழைவுத் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தேசிய அளவில் இளநிலை மற்றும் முதுநிலை கலை- அறிவியல் படிப்புகளுக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற ஹரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி. குஹாத் தலைமையிலான குழுவின் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கக்கூடாது என்றும், கரோனா பாதிப்பு சூழலில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குஹாத் குழு, பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருப்பது அதிகார வரம்பு மீறிய செயலாகும். இது கண்டிக்கத்தக்கது என்றும், கரோனா பாதிப்பால் பல மாநிலங்களிலும், சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளிலும், 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் வாடும் நிலையில் எந்த நுழைவுத்தேர்வும் தேவையில்லை; நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.