பிரதமர் மோடி வரும் 8 ஆம் தேதி சென்னை வருவதை ஒட்டி நகரின் பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் மோடி, சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.
அடுத்த நாளான ஏப்ரல் 9 ஆம் தேதி முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். இதற்காக சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தம் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் தனித் தனியாக நேரம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று ஓ.பி.எஸ். செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், “மோடியை சந்திக்க இருக்கிறீர்களா” என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓ.பி.எஸ். “வாய்ப்பு இருந்தால் சந்திப்போம்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள், “உங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓ.பி.எஸ். “இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.