திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக இளைஞரணி அமைப்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் திமுக இளைஞரணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்தும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் உள்ள பணிகளைத் தமிழர்களுக்கே வழங்க வேண்டும், சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மீது ஏவும் மத்திய பாஜக அரசின் போக்கிற்கு வன்மையான கண்டனம், சமூக நீதிக்கு எதிராகவும், தமிழ்நாட்டிற்கு எதிராகவும் பொதுவெளியில் செயல்படும் ஆளுநருக்குக் கண்டனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக இளைஞரணிக் கூட்டத்தில் இயற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “திமுக இளைஞரணிக் கூட்டத்துக்கு வந்தவுடன் இளைமையாக உணர்கிறேன். என் வயது 70. ஆனால், தற்போது நான் 20 வயது போல உணர்கிறேன். சுயமரியாதையும், பகுத்தறிவும் உடைய சமூகமாக மாற்றிய திராவிடத்தின் வாரிசுகளாக நாம் இருக்கிறோம். இளைஞர்கள் சமூக ஊடகங்களை நமது சாதனைகளை எடுத்துச் சொல்ல பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் காட்டிய ஒற்றை செங்கல்லை எதிரிகளால் இப்போதும் மறக்க முடியவில்லை. உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பணி, ஆட்சிப் பணி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து திமுகவிற்கும், திமுக ஆட்சிக்கும் நல்ல பெயரை வாங்கித் தருகிறார். நமது எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறாரோ நாமும் அந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும்.
அமித்ஷா தொடங்கி வைத்திருப்பது பாத யாத்திரை அல்ல. 2002ல் குஜராத்திலும், இப்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை. மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தலாம் என்று யாத்திரையை தொடங்கி வைத்திருக்கிறார். பாஜகவில் எந்தத் தலைவருடைய வாரிசுகளும் அரசியல் பதவிகளில் இல்லையா? பாஜகவில் மாநில வாரியாக பதவியில் இருக்கும் வாரிசுகளின் பட்டியலை வெளியிடவா? எல்லோரும் பதவி விலகிவிடுவார்களா? குற்ற வழக்குகளில் தொடர்புடைய மத்திய அமைச்சர்கள் எல்லாம் மத்திய அமைச்சரவையில் தானே இருக்கிறார்கள். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருப்பது பற்றி கேள்வி கேட்கும் நீங்கள் பிரதமர் மோடியிடம் இதே கேள்வியை கேட்பீர்களா?
இந்தியா கூட்டணியின் பெயரைக் கேட்டாலே சிலர் அலறுகிறார்கள். பாட்னா, பெங்களூரில் நடந்த கூட்டம் வெற்றி பெற்றதைத் தாங்கிக் கொள்ள முடியாத பிரதமர், எங்கு சென்றாலும் திமுகவை விமர்சிக்கிறார். பாஜக வெல்லவே முடியாத கட்சி என்பது போல பயம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் ஆட்டமெல்லாம் இன்னும் சில மாதங்கள்தான். விரைவில் இந்தியாவுக்கு விடியல் வரப்போகிறது” எனப் பேசினார்.