அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்கும் என ஓ.பி.எஸ். அழுத்தமாகச் சொன்னாலும் கூட்டணி குறித்த மோதல்கள் இன்னும் முடிந்தபாடில்லை. இதனால், அதிமுகவில் பரபரப்பு இருந்து கொண்டே இருக்க, பாஜகவை பற்றி கருத்து சொன்ன முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி மேலும் சூட்டைக் கிளப்பி வருகிறது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோற்றது என்று வெளிப்படையாகப் பேசினார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இதற்கு பதிலடி தரும் வகையில், உங்களால் (அதிமுக) தான் நாங்கள் (பாஜக) தோற்றோம் என்று பாஜக ராகவன் வரிந்து கட்ட, கூட்டணி மோதல் இரு கட்சிக்குள்ளும் வெடித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கிறது என்று விளக்கமளித்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரே இப்படி சொன்னதால் கூட்டணி குறித்த சர்ச்சைகளும் மோதல்களும் நின்று போகும் என இரு கட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், தான் சொன்ன கருத்தில் இருந்து மாறாமல், மீண்டும் பாஜகவை சீண்டினார் சி.வி.சண்முகம்.
இது, பாஜகவில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில், “சி.வி.சண்முகத்தின் கருத்தினை இபிஎஸ் - ஓபிஎஸ் ஏற்கிறார்களா? பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில் சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவுக்கு 87,403 ஓட்டுகள் போட்ட மெஜாரிட்டி மக்களை அவமானப்படுத்திய சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பதிவு செய்திருந்தார். அவரது பதிவு காட்டுத் தீ போல பரவ, அதிமுகவினர் கொந்தளித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நடவடிக்கை எடுக்கச் சொல்லி யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது. வெளியில் எந்த கருத்தையும் சண்முகம் பேசவில்லை. கட்சிக் கூட்டத்தில் பேசியவை. அதை குற்றம் என சொல்ல முடியாது. குற்றம் சொல்ல இவர்கள் (பாஜக) யார் ? எங்கள் கட்சி வேலையை நாங்கள் பார்க்கிறோம். அதேபோல அவர்களும் (பாஜக) அவங்க வேலையைப் பார்க்கட்டும். நடவடிக்கை எடுக்கச் சொல்லும் தார்மீக உரிமை பாஜகவுக்கு இல்லை. அப்படி சொல்லவும் கூடாது” என்று பாஜகவின் கருத்துக்கு பதிலடி தந்திருக்கிறார். இதனால் மீண்டும் சூடு பிடித்துள்ளது கூட்டணி சர்ச்சை.