முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கோடநாடு எஸ்டேட்டுக்கு நானே உரிமையாளர் என சசிகலா வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்ட விளக்க அறிக்கையில் தகவல் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஜெயா பிரிண்டர்ஸ், நமது எம்ஜிஆர் நிறுவனத்திற்கும் தானே உரிமையாளர் என்று சசிகலா கூறியுள்ளார். மதிப்பிழக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் மூலம் ரிசார்ட், ஷாப்பிங் மால், ஆலைகள் உள்ளிட்ட சொத்துகளை வாங்கியதை சசிகலா வருமானத் துறையிடம் முழுமையாக மறுத்துள்ளார் என்று தகவல் கூறுகின்றன.அதேபோல் கோடநாடு, க்ரீன் டீ எஸ்டேட், ராயல்வேலி, ஃ புளோரிடெக் பங்குதாரராக ஜெயலலிதா உடன் இருந்ததாகவும், ஜெயலலிதா மறைந்த பின் 2016- ஆம் ஆண்டு டிசம்பர் 6- ஆம் தேதி முதல் அந்த நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என வருமான வரித்துறை அறிக்கையில் சசிகலா கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இவ்வளவு சொத்துக்கான வருவாய் எப்படி வந்தது அதற்கான ஆதாரங்கள் என்ன என்று தீவிர விசாரணையில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு சில அரசு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து சசிகலா தரப்பு எந்த தகவலும் கூறவில்லை என்று என்கின்றனர். ஆனால் விசாரணை தீவிரமாக வரும் போது இவ்வளவு சொத்துக்கு வருவாய் எப்படி வந்தது என்ற தகவலை விரைவில் சசிகலா கூறுவார் என்று சொல்கின்றனர். இதனால் தமிழகத்தில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் பயத்தில் இருப்பதாக சொல்லப்டுகிறது. எந்தெந்த அமைச்சர்கள் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற பட்டியல் சசிகலாவிடம் இருப்பதாக சொல்கின்றனர். அந்த பட்டியலை சசிகலா வெளியிட்டால் அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய அமைச்சர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகும் என்கின்றனர். தன்னிடம் கோடி கோடியாக கொட்டிய அமைச்சர்கள் பட்டியல் முதல், ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்க இத்தனை ஆயிரம் கோடி வேண்டும் என்று பேரம் பேசிய மத்திய அமைச்சர்கள் வரையில் பலரது பெயர்களை வெளியிட சசிகலா தரப்பு ரெடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதோடு அமைச்சர்கள் பற்றி உளவுத்துறை கொடுத்த அறிக்கையும் சசிகலா தரப்பிடம் இருப்பதாக கூறிவருகின்றனர். இந்த தகவலை விரைவில் சசிகலா வெளியிடுவார் என்கின்றனர். இதனால் தமிழக அமைச்சர்கள் ஆடிப்போயுள்ளதாக கூறுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சசிகலா சொத்து விவரங்கள் பற்றி அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கு அது பற்றி பேச வேண்டாம் என்று கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.