Skip to main content

செப்டம்பரில் இடைத்தேர்தல்? நாங்குனேரியை திமுகவுக்கு கொடுக்க நினைக்கும் எம்.பி. - காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

 

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த எச்.வசந்தகுமார் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தனது எம்.எல்.ஏ பதவியை  ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி தொகுதியை தேர்தல் ஆணையம் காலியான தொகுதியாக அறிவித்தது.

 

udhayanidhi stalin - vasanthakumar



விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி கடந்த சில தினங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதியும் தற்போது காலியானது. ஒரு தொகுதி காலியானால் அதில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். எனவே காலியாக உள்ள இந்த இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதியையும் சேர்த்து வரும்  செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இதற்கிடையே சமீபத்தில் திருச்சி பொதுக்கூட்ட மேடையில் பேசிய உதயநிதி, காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசரைப் பார்த்து, நாங்குனேரி தொகுதியை திமுகவுக்கு விட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 


 

நாங்குனேரியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வசந்த்குமாரும், தொகுதியை திமுகவுக்கு கொடுத்துவிடலாம் என்று தங்கள் கட்சி தலைமையிடம் சொல்கிறாராம். ஏனென்றால் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் அங்கு நிறுத்தப்படும் வேட்பாளருக்கான செலவை ஏற்கும்படி கட்சித் தலைமை பொறுப்பு கொடுத்துவிடும் என்று யோசித்துத்தான் திமுகவுக்கு அந்த தொகுதியை தள்ளிவிட நினைக்கிறாராம். 
 

ஆனால் காங்கிரஸ் நிர்வாகிகளோ, போனமுறை காங்கிரஸ் ஜெயித்த நாங்குனேரியில் காங்கிரஸ் கட்சியே நிற்க வேண்டும். நாங்குனேரியை விட்டுத் தரக்கூடாது என்று சோனியா மற்றும் ராகுல் வரை மனு அனுப்பி வருகிறார்களாம். 


 


 

சார்ந்த செய்திகள்