காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கில் வரும் 16ம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறினார்.
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி துவக்க விழா, ரயில்வே மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழா, புதிய பாலம் திறப்பு விழா உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்திற்கு வந்திருந்தார்.
இந்நிலையில், இன்று (மே 14, 2018) அவர் குடும்பத்துடன் திருப்பதி சென்று வழிபட திட்டமிட்டு இருந்தார். இதற்காக மனைவி மற்றும் குடும்பத்தினரை முன்னதாக திருப்பதிக்கு அனுப்பி வைத்தார். திருப்பதிக்குக் கிளம்பும் முன், அவருடைய வீட்டு முன்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாவது, ’’காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் வரைவு திட்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அதில் பல்வேறு நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு நல்லதொரு தீர்ப்பு கிடைக்க இருக்கிறது. வரும் 16ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.’’