மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் "தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில், அதைப் பெரிதுபடுத்தக் கூடாது என்ற போதிலும், அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் நஞ்சு பூசப்பட்ட அம்பு எய்ததை போன்றது. ஸ்டாலின் பேச்சை கேட்கும் கிளிப்பிள்ளை போல திமுகவினர் பேசிவருவதால் பாரதியின் பேச்சு ஸ்டாலினின் கருத்தாக தான் இருக்க முடியும்.
ஹெச்.ராஜாவை பொறுக்கி என பாரதி கூறியதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை , தெரிந்தே அவரை அப்படி பேசியதை கண்டிக்கிறோம். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தகுதிக்கான அறுகதையற்றவர் என்பதுக்கு அவரது பேச்சு நிருபணம். வடமாநிலத்தவர்களை முட்டாள்கள் என்று கூறுவது வேதனை அளிக்கிறது. பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக தேர்வானது நாங்கள் போட்ட பிச்சை என்று கூறியதை மானமுள்ள யாரும் ஏற்கமாட்டார்கள்.
திமுக , திக இல்லையென்றால் இலைகளை உடுத்தி ஆதிவாசிகள் போல இருப்போம் என்பது போல கூறியுள்ளார். திமுகவினர் இப்படிதான் சலுகைகளை செய்துவிட்டு பிச்சைபோட்டதாக கூறுவார்கள். அமைதியாக உள்ள இஸ்லாமியர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக தூண்டிவிட்டு போராட்டம் நடத்தவைக்கிறது. இந்து மக்களை ஏமாற்றுவதற்காக திமுகவினர் கயிறைகட்டிகொண்டு திரிகின்றனர்.
திமுகவை சேர்ந்தவர்கள் யார் கோவிலுக்கு போனாலும் ஆயிரக்கணக்கில் அய்யருக்கு வழங்குவோம் என கூறியுள்ளார். திமுகவினர் தங்களது பாவத்தை போக்கவும், கொள்ளையடித்த பணத்தை கணக்கு காட்டவும் திமுகவினர் அய்யர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர்.
ஊடகத்தினரை இழிவாக பேசியதற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஆர்.எஸ்.பாரதியின் ஊடகம் தொடர்பான பேச்சுக்கு கலைஞர் டிவியில் விவாதம் நடத்துவார்களா?. ஆர்.எஸ்.பாரதியின் ஊடகம் குறித்த பேச்சு தயாநிதிமாறனை குறிப்பிடவது போல உள்ளது. பதவியை தக்கவைப்பதற்காக பாரதி மன்னிப்பு கேட்டுள்ளார். பத்திரிக்கையாளர்களுக்கு விபச்சார மாலை போட்டுள்ளார் ஆர்.எஸ்.பாரதி. அவரது பேச்சுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆர்.எஸ். பாரதியை கி.வீரமணி ஏன் கண்டிக்கவில்லை. பட்டியலினத்தவர்கள் எப்போதும் எங்கள் ரத்தம். ஓட்டுப் பிச்சை எடுத்து ஆட்சிக்கு வந்த திமிரின் காரணமாக தி.மு.க-வினர் இப்படிப் பேசிவருகின்றனர்" என தெரிவித்தார்.