திண்டுக்கல்லில் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் டி.வி.வி. பேசுகையில், “நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உறுதி யாக கூட்டணி அமைத்து தேர்த லை நாங்கள் சந்திப்போம். கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் முடிந்த பிறகு செய்தியாளர்கள் மத்தியில் அறிவிக்கப்படும். துரோக சக்தியான எடப்பாடி பழனிச்சாமி உடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த காலத்திலும் பயணிக்காது. எடப்பாடி பழனிச்சாமி என்ற துரோகியுடன் எந்த காலத்திலும் நாங்கள் இணைந்து செயல்பட மாட்டோம். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவருடன் இணைந்து போட்டியிடமாட்டோம்.
அம்மாவின் உண்மை விசுவாசிகளான அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து தேர்தலை நாங்கள் சந்திக்க உள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. நான்கரை ஆண்டு காலம் அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்தது யார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியவருக்கு துரோகம், இந்த ஆட்சியை பாதுகாத்து கொடுத்தவர்களுக்கும் துரோகம், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம், எடப்பாடி பழனிசாமி துரோகம் என்ற கத்தியை கையில் எடுத்து உள்ளார். அந்த கத்தியாலேயே அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி வீழ்வார். எடப்பாடி பழனிச்சாமி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார். துரோகம் என்றைக்குமே ஜெயிக்கப் போவதில்லை. அது வீழப்போகும் நேரம் வந்து விட்டது. பாராளுமன்ற தேர்தலில் பல கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது உறுதியான பிறகு தகவல் தெரிவிக்கப்படும்.
திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் விவசாயிகள் இளைஞர்கள் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போக்கு வரத்து தொழிலாளர்கள் அனைத்து சமுதாய மக்களும் அனைத்து தரப்பினரும் ஏண்டா இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என மிகவும் வருத்தத்துடன் உள்ளனர். இந்தக் கோபம் இந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தப் போகிறது. இந்தியா கூட்டணி எங்கு இருக்கிறது என்பது தெரியாமல் போய்விட்டது” என்றார்.
பழைய அதிமுக மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு :- பதில் அளித்த டிடிவி தினகரன், அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றாக உள்ளோம். அதனை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்து வருகிறார். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. ஆனால் பழனிச்சாமி போன்ற சுயநலவாதிகள் அதனை தடுக்கின்றனர் என்று கூறினார்.