தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே ரங்கராஜன் ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது. தமிழகத்தில் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு மார்ச் 6 ஆம் தேதி முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். மார்ச் 16 ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 19 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுகவில் தலா 3 ராஜ்யசபா சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. திமுகவை பொறுத்தவரை மூன்று ராஜ்யசபா சீட்டுகளையும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காமல் திமுகவினரே எடுத்து கொள்ளும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கட்சியில் இருக்கும் சீனியர்கள் ராஜ்யசபா சீட் பெற வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுக தலைமையோ புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவவம் கொடுக்கலாம் என்றும் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் ராஜ்யசபா சீட் வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக தேமுதிவில் சுதீஷிற்கு ராஜ்யசபா சீட் வாங்கியே ஆக வேண்டும் என்று தேமுதிக தலைமை விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் தேமுதிகவுக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேறவும் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் பாஜகவின் ஆதரவு வாசனுக்கு இருப்பதால் அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்றும் பாஜக அதிமுகவிடம் கூறிவருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிமுகவில் இருக்கும் சீனியர்கள் பலர் தங்களுக்கு ராஜ்யசபா கொடுக்க வேண்டும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்கின்றனர். இதனால் திமுக மற்றும் அதிமுகவில் ராஜ்யசபா சீட்டிற்கு கடும் போட்டி நிலவுவதாக கூறுகின்றனர்.