ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியினரிடையே துளிகூட பயம் இல்லாமல் போய்விட்டது என அதிமுக அமைச்சரே பேசியது இலைக்கூடாரத்தினரை முனுமுனுக்கவே செய்திருக்கிறது.
நாகை மாவட்டம் சீர்காழியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைதாங்கி பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஒரு சிறப்பான அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் இதுதான் முதல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகும். எனவே அரசாணை வருகிற நேரத்தில் பாதிப்புகள் இல்லாத வகையில் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டம் இருக்க வேண்டும் என சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி கூறியிருக்கிறார்.
ஆக ஜெயலலிதா செயல்படுத்திய எந்தத் திட்டத்தையும் அணு அளவும் குறையாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு முழுமையாக வழங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பை நாம் பெரிய அளவில் இழந்துவிட்டோம், என காரனம்கூறுவது ஏற்புடையது அல்ல. மீத்தேன் ஹைட்ரோ கார்பன், குடியுரிமை திருத்த சட்டம், போன்ற பல காரணங்கள் தான் என சிலர் கூறுகிறார்கள். நம்முடைய தோல்விக்கு மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் ஒருபோதும் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் உறுதிப்படுத்திக் கூறிவிட்டார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் பொய்களை கூறி மக்களை குழப்புகின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவினரிடையே பயம் என்பதே இல்லாமல் போய் விட்டது. அது இனிமேல் மாறும், எல்லாம் சரியாகிவிடும்." என அவர் கூறினார்.