போலியான செய்திகள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், போலி செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்ற கருத்தரங்கில் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார்.
இதில் பேசிய அவர், ரூ. 3,000 கோடி செலவில் ஒரு மிக உயரமான சிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இதுதான் உனது அடையாளம், கலாசாரம் என்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு நோக்கம் இருக்கிறது. இதைத் தட்டிக் கேட்பதால் என்னை இந்து எதிர்ப்பாளர் என்கிறார்கள். உயரமான சிலை நாட்டிற்கு தேவையா? உயரம் என்பது வாழ்க்கை முறையில் இருக்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தகவல் நமக்கு கிடைத்தால், அது குறித்து ஆராய்ந்து செயல்பட்டு போலி செய்திகளை தடுக்க வேண்டும். வதந்திகள் மூலம் பயனடைய வலதுசாரி அமைப்புகள் முயற்சிக்கின்றன. வதந்தியை நம்பி கும்பலாக சேர்ந்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்தள்ளன.
உள்நோக்கத்துடன் ஒருவர் மீதோ, அமைப்புகள் மீதோ பொய்ச்செய்திகள் பரப்பப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் வலதுசாரி அமைப்புகளால் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. மாட்டிறைச்சி விவகாரத்தில் வதந்திகள் பரப்பப்பட்டு தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன என்றார்.