ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஈரோட்டில் நேற்று (29.3.19) பிரச்சாரத்தை தொடங்கினார். மாலை 4.30 மணி முதல் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கணேசமூர்த்தியை ஆதரித்து வாக்கு சேகரித்த வைகோ, மேலும் பேசும் போது, "மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டம் மற்றும் கெயில் எரிவாயு குழாய் திட்டம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஈரோட்டின் அடையாளமான மஞ்சளுக்கு வணிக வளாகம் அமைக்கப்படவில்லை. விசைத்தறி ஜவுளிக்கு ஜி.எஸ்.டி., சிறுகுறு, சரக்கு சேவை வரி திட்டத்தால் பல வணிகர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய பா.ஜ.க. மோடி அரசில் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட கிட்டதட்ட 25 பேர் ரூ 90 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓடிவிட்டனர். 2 லட்சத்து 40 ஆயிரம் கார்ப்பரேட் கம்பெனிகளின் வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்டிக்கொள்ளுங்கள் என பா.ஜ.க. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ரூ. 5900 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். கட்டுமானப்பணிகளுக்கு பொருட்கள் இறக்கப்பட்டுவிட்டது. இதனால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் அளவிற்கு விளை நிலங்கள் பாலைவனம் ஆகிவிடும். அதன்பின் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நம் மண்ணை விற்கும் அவலநிலை ஏற்பட்டுவிடும். மேலும் பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டதில் பல கோடி ரூபாய் கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் பெறும். ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் காவல்துறையை கூலிப்படையாக மாற்றி 13 பேரை சுட்டு தள்ளியது தமிழக அரசு” என்று பேசினார்.