உலக மக்களோடு தொடர்பு கொள்ள இந்தி மொழி உதவாது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்திய ஒற்றுமைப் பயணத்தின் இடையே ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இதில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது, “வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறக்கிறேன். உலக மக்களிடம் உரையாட, தொடர்பு கொள்ள ஹிந்தி மொழி உதவாது. அதற்கு ஆங்கில மொழியை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், பாஜக தலைவர்கள் இந்தி படிக்கச் சொல்கிறார்கள்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு அதன்மூலம் அமெரிக்க மக்களுடன் போட்டியிட வேண்டும். பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதை விரும்பாத பாஜக தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பது ஏன்? உண்மையில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக விரும்பவில்லை. மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதைத் தடுக்கவே பாஜக இந்தி படியுங்கள் என வலியுறுத்துகிறது.
ஏழைகளின் குழந்தைகள் ஆங்கிலம் படித்து முன்னேற வேண்டும். ஆனால், பாஜக ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறது” எனக் கூறினார்.