தமிழ்நாட்டில் நாடளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களும் வாங்கப்பட்டன. நேற்று வேட்புமனுதாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனு மீதான பரிசீலனைகள் நடைபெற்றது.
சென்னையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு பரிசீலனை காலை துவங்கியது. தொடங்கியது முதலே வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது. மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பிரியதர்ஷினியின் வேட்புமனுவில் பிழை இருப்பதாகக்கூறி, அதிமுக ஆதரவு சுயேட்சை வேட்பாளர்களும், அதிமுகவினரும் கடும் அமளியில் ஈடுபட்டனர். தேர்தல் பொது பார்வையாளர் ரஜித் துன்காணியா மற்றும் பெரம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரன் ஆகியோர் பிரியதர்ஷினியின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.
அதன்பின்பு வெற்றிவேல் வேட்புமனு மீதான பரிசீலனை தொடங்கியதும் மீண்டும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவரது வேட்புமனு மீதான பரிசீலனை இறுதியாக நடத்தப்படும் என அறிவித்தனர். பிறகு இறுதியாக நடந்தபோதும் அதிமுகவினர் பிரச்சனை செய்தவாறே இருந்தனர். வெற்றிவேலின் வேட்புமனுவில் பிழை உள்ளதாகக்கூறி அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூச்சலிட்டனர். தேர்தல் அலுவலர், வெற்றிவேலின் வேட்புமனுவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
இதையடுத்து அதிமுகவினர், தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறையிலேயே அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் கைகலப்பானது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு சரக துணை ஆணையர் சாய் சரண்தேஜஸ்வி அமளியில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். இரண்டு மணி நேர வாக்குவாதத்திற்குபின் நிலைமை கட்டுக்குள்கொண்டுவரப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மீண்டும் அதிமுகவினர் வெற்றிவேலின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்றும், அவரது பெயரை நோட்டீஸ் போர்டில் போடக்கூடாது என்றும் புகார் மனு கொடுத்தனர்.