![Erode East by-election; Sad Sellur Raju](http://image.nakkheeran.in/cdn/farfuture/rwWN0eqTeuPDazpgcnYln1-3gBPCDS2jLmY1KXAYBI0/1676685833/sites/default/files/inline-images/969_3.jpg)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இடைத்தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனுக்காக காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜக போன்ற கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “இளங்கோவன் முன்னாள் மத்திய இணை அமைச்சராக இருந்தவர். சட்டமன்றத்தில் பத்தோடு பதினொன்றாக போய் உட்காருவாரா. நிச்சயமாக சட்டமன்றத்திற்கு வரமாட்டார். தென்னரசுவிற்கு போட்டால் நம்முடன் இருப்பவர். இளங்கோவனை பார்க்கவே முடியாது” என செல்லூர் ராஜு மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, “நாங்கள் 15 நாட்களாக உழைத்துள்ளோம். எங்கள் பிள்ளைகளை எல்லாம் விட்டுவிட்டு இங்கே வந்து இருக்கோம். ஆனால் இவர்கள் செய்வது உலகத்தில் எப்போதும் நடக்காத எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக உள்ளது. இப்படி எந்த தேர்தலையும் நான் பார்த்ததில்லை. ஆளுங் கட்சிக்காரர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள். ஆனால் இப்படி ஆடு மாடுகளைப் போல் அடைப்பது; சினிமா காட்டுவது; பிரியாணி போடுவது; பிஸ்கட் கொடுப்பது; பிஸ்லரி பாட்டில் கொடுப்பது என இதையெல்லாம் பார்த்தால் வித்தியாசமாக இருக்கிறது இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்” என வருத்தமாகக் கூறினார்.