சென்னைக்கு வந்த காரை சோதனைச் சாவடியில் மறித்துச் சோதனையிட்டபோது அந்த காரில் ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக காரில் இருந்த 3 பேரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 6ஆவது ஊரடங்கு சில தளர்வுகளுடன் உள்ளது. இப்போது மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லை, மாநில எல்லை, சுங்கச் சாவடி போன்ற இடங்களில் போலீசார் வாகனங்களைச் சோதனை செய்து இ- பாஸ் இருக்கிறதா என ஆய்வு செய்கின்றனர்.
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் தமிழக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்த MLA பாஸ் ஒட்டப்பட்டிருந்த காரை நிறுத்தி ஈ பாஸ் இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர். அதற்குக் காரில் இருந்த 3 பேரும் இல்லை என்று கூறியுள்ளனர். உடனே போலீசார் காரை சோதனை செய்துள்ளனர்.
தமிழக பதிவு எண் கொண்ட அந்த காரில் உரிய ஆவணமின்றி ஆந்திராவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரை பிடித்துத் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான தகவல் வருவாய்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.