தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து தொகுதிகளிலும் இருக்கும் முக்கிய 10 பிரச்சனைகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். அதன் படி கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி உட்பட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை கொடுத்திருந்தனர். அதன் படி கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாவட்டத்தில் மோசமான சூழ்நிலை தொடர்ந்து இருக்கிறது. மக்கள் மிகப் பெரிய பயத்தில் உள்ளனர். மீண்டும் 98 போல் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அதைக் குறித்தும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.
குறிப்பாக உளவுத்துறை முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. டேவிட்சன் மற்றும் சில அதிகாரிகள் எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கில் தான் செயல்படுகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் முன்னாள் அமைச்சர்கள் மீது எப்படி எல்லாம் வழக்கு போடலாம் என்றுதான் யோசிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் எப்பொழுதும் மதப் பிரச்சனை இருந்ததில்லை. யார் தவறு செய்தாலும் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுங்கள். எதுவும் யோசிக்காதீர்கள். அரசியலுக்காகவோ தேர்தலுக்காகவோ யோசிக்காதீர்கள். ஜமாத் கூட்டமைப்பினர் பேசியுள்ளனர். யார் தவறு செய்தாலும் நாங்களே வந்து சொல்கிறோம் என்றும் சொல்லி இருக்கின்றனர். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.
அதே போல் பல தொழில்கள் நசுங்கி இப்பொழுதுதான் மேல் நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. கோவை ஒற்றுமையான ஊர். நாங்கள் அமைதியை விரும்புகிறோம்” எனக் கூறினார்.