தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை முதலே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்த நிலையில் தற்போது வாக்கு பதிவானது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இடைத்தேர்தல் குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது 2வது மகன் சஞ்சய் சம்பத்துடன் வாக்களித்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் கை சின்னத்திற்கு தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை பலப்படுத்தவும் அவரது 20 மாத நல்ல ஆட்சியின் அடையாளமாக இந்த வெற்றி கண்டிப்பாக அமையும். அதேபோல் ராகுல் காந்தியின் தியாக நடைப் பயணத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு கண்டிப்பாக இருக்கும். வரப்போகிற மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, வெள்ளோட்டமாக இந்த தேர்தல் முடிவு அமையும். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்றைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதோ அன்றைக்கே மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என என் பெயர் அறிவிப்பதற்கு முன்னாலேயே மக்கள் முடிவு செய்துவிட்டனர். எனவே, மிகப்பெரிய வெற்றியாக இது அமையும். வாக்கு வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியாது. இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியாக அமையும். எதிரணியில் இருப்பவர்கள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள். தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதம் இல்லாமல் சில தேர்தல் அலுவலகங்களை மூடினார்கள். அனுமதி பெறாமல் நடைபெற்ற தேர்தல் அலுவலகங்களை மூடிவிட்டனர். எனவே, தேர்தல் நல்லபடியாக, நேர்மையாக நடக்கிறது. நான் வாக்களிக்கும் போது என் கையில் மை வைக்கப்பட்டது. 10 நிமிடம் ஆகியும் அப்படியே இருக்கிறது. தேர்தலில் காமராஜர் தோற்றபோது, அவரிடம் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை சரியில்லை என்று சொன்னார்கள். மையாவது, மண்ணாங்கட்டியாவது... மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆகவே, அநாவசியமாக மை மீது குற்றச்சாட்டை வைக்காதீர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதே வாதம் இப்போதும் பொருந்தும். வாக்குச்சாவடியில் ஆதார் அட்டையை ஏன் ஆவணமாக ஏற்க மறுத்தார்கள் என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். ஆளுங்கட்சியின் மீது அவர்கள் தேவையில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இருக்கிறார்கள்." என்று கூறினார்.
கருங்கல்பாளையம் கல்லு பிள்ளையார் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மக்கள் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். கொரோனா காலத்தில் நான் எதுவும் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். ஆனால் எங்கள் தொகுதி மக்கள் 70 ஆயிரம் பேருக்கு அரிசி வழங்கியுள்ளேன். எடப்பாடி பழனிசாமி கொரோனா காலத்தில் ரூ.2000 உதவித்தொகை வழங்கினார். ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்பட்டது. தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் நன்றாக செய்துள்ளது. வாக்காளர்களுக்கு மை வைப்பதில் ஒரு சில இடங்களில் தவறு நடக்கலாம். அது குறித்து கட்சி தலைமையில் இருந்து அறிக்கை வரும். ஈரோட்டில் எப்போதும் நாகரிகமான அரசியல் இருக்கும். திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சியாக இருந்தாலும் சண்டை சச்சரவு வராது. அநாகரிகமாக ஒருவரை ஒருவர் திட்டி பேசிக்கொள்ள மாட்டார்கள். அடிமட்ட தொண்டர்களுக்குள் சண்டை வருமே தவிர தலைவர்களுக்குள் சண்டை வராது. எனவே தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது. இன்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக எனக்கு தகவல் இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகமாக இருப்பதால் வாக்குப்பதிவு தாமதமாகிறது. அதை விரைவுபடுத்துமாறு கூறியுள்ளோம்." கூறினார்.
ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சி.கே. சரஸ்வதி வாக்களித்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இந்த இடைத்தேர்தலில் ஏராளமான பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் உள்ளன. எனவே எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது பணநாயகத்தின் வெற்றியாகும். பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவரும் நிலை மாற்றப்பட வேண்டும். இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தான் திருமங்கலம் ஃபார்முலா போல ஈரோடு கிழக்கு ஃபார்முலா உருவாக்கப்பட்டதாக மக்களும் பேசிக்கொள்கின்றனர். மக்களை தேர்தல் பணிமனையில் அடைத்து வைத்து பணம், உணவு விநியோகித்ததாக மக்களே பேசுகின்றனர். எனவே வாக்காளர்கள் பணம் வாங்க மறுக்க வேண்டும்; முறைகேடுகளை தடுக்க முன்வர வேண்டும்; அப்போதுதான் ஜனநாயகம் பெருமை அடையும். வாக்களிக்கும் போது வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மையை அழிக்க ஸ்பிரிட் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது இக்குறைபாடுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும்." என்று கூறினார்.