ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 4 ஆம் தேதி திருமகன் ஈவேரா எம்எல்ஏ இறந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்க ஓரிரு மாதங்களாகும் என அரசியல் கட்சிகள் காத்திருக்க, அவர் இறந்த அடுத்த 14 நாட்களிலேயே அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது. ஜனவரி 31 இல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி எனவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.
அதிமுக உடனான கூட்டணியில் உள்ள பாஜக ஈரோடு இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், பாஜக - அதிமுக கூட்டணியில், ஈரோடு கிழக்கு தொகுதி மற்றொரு கூட்டணிக் கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசினார். அதைத் தொடர்ந்து, இன்று காலை அதிமுக நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்துகொள்ள வேண்டியது கூட்டணிக் கட்சித்தலைவர்களின் கடமையாக இருக்கிறது. இடைத்தேர்தல் வெற்றிக்கான யூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக மூத்த அமைச்சர்கள் தமாக அலுவலகத்திற்கு வந்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
எங்கள் இலக்கு கூட்டணி உறுதியாக வெற்றிபெற வேண்டும் என்பதுதான். அதிமுக, பாஜக, தமாக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கக்கூடாது. திமுகவின் செயல்பாடுகள் மக்களுக்கு திருப்தி அளிக்காத சூழலில் எங்கள் கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். எனவே, ஒத்தக்கருத்தோடு ஓரிரு நாட்களில் கூட்டணிக்கட்சிகள் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம். இடைத்தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம்” எனக் கூறினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கட்சியான தமாகா போட்டியிடும் என நம்பப்பட்ட நிலையில், கூட்டணி வெற்றி முக்கியம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியது இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.