போதைப்பொருள் விற்பனையின் பின்னணியில் யார் இருந்தாலும் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சேலம் மாநகரின் மையப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஐந்தடுக்கு கட்டிடத்தில் போதை மருந்துகள் மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதை மற்றும் கஞ்சா போதையில் மயங்கிக் கிடப்பதாகவும் வரும் ஊடகச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
காவல் நிலையத்திற்கு அருகிலேயே உள்ள இடத்தில் கூட போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாகக் கிடைப்பது என்பது இந்த திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் எந்தளவு புரையோடிப் போயுள்ளது என்பதற்குச் சாட்சி. இனியாவது காவல்துறை விழித்துக் கொண்டு, போதைப் பொருள் விற்பனையின் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், சேலம் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் போதைப்பொருள் புழக்கத்தின் பிடியிலிருந்து மீட்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேர்மையாக இருக்கும் ஒரு சில காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.