நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய மரணம், சட்ட ஒழுங்கு பிரச்சனை என திமுக அரசைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்கமணி, “இந்த அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் எந்த மாதிரியான அதிருப்தி இருக்கிறது என்று இந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தால் தெரியும். பொதுவாக நாங்கள் சொன்னால் எதிர்க்கட்சி என்று சொல்வார்கள். ஆனால் நிதியமைச்சராக இருந்த பிடிஆரே திமுக அரசு 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்திருக்கிறது என்று சொன்னார். எடப்பாடி பழனிசாமியும் கூட அந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போதும் பதிலில்லை. டாஸ்மாக்கை பற்றி அவரது கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். அவர்களையும் திமுக அரசே கைது செய்திருக்கிறது.
முன்பு தமிழகத்தில் அனுமதியில்லாமல் எந்த பாரும் இயக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். ஆனால் சமீபத்தில் மது அருந்தி இருவர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் அனுமதியில்லாமல் இயங்கி வந்த பார்கள் மற்றும் டாஸ்மாக்கிற்கு சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாண்டு காலமாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வந்த பார்கள் மற்றும் டாஸ்மாக்கில் நடைபெற்ற ஊழலை விசாரிக்க வேண்டும் என்று என்று வலியுறுத்தி வருகிறோம். வருமான வரிசோதனையின் போது அதிகாரிகள் திருடர்களைப் போல் சுவற்றில் ஏறிக் குதித்து உள்ளே வந்தார்கள் என்று அமைச்சர் கூறினார். என்னுடைய வீட்டிலும், முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டிலும் கூடத்தான் வருமான வரித்துறை சோதனைக்கு வந்தபோது அதிகாரிகள் சுவற்றில் ஏறிக் குதித்து உள்ளே வந்து சோதனை நடத்தினார்கள்.
அன்றைய தினம் அந்த சிசிடிவி காட்சிகளை எடுத்து செய்தியாக ஒளிபரப்பினார்கள். அதெல்லாம் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. அவர்கள் வீட்டில் நடந்தால் மட்டும்தான் வாய் திறக்கிறார்கள். அவர்களுக்கு வந்தா ரத்தம்... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி என்ற அடிப்படையில் திமுக அரசு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மடியில் கணம் இல்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். எதற்காகத் தொண்டர்களை வைத்து அதிகாரிகளை மிரட்ட வேண்டும். எங்களது ஆட்சியின் போதுதான் எங்கள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நாங்கள் முழு பாதுகாப்பு கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லை. அதிகாரிகளே காவல் நிலையத்தில் சென்று பாதுகாப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
கரூர் மாவட்டத்திற்கு ஸ்டாலின் முதல்வர் இல்லை. செந்தில் பாலாஜிதான் முதல்வர். அவர் சொல்வதைத்தான் காவல் கண்காணிப்பாளர், வருவாய் அதிகாரிகள் என அந்த மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் கேட்பார்கள். அந்த அளவிற்கு அமைச்சர் வைத்திருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.