ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சி காங்கிரஸுக்கு தொகுதியை ஒதுக்கி, காங்கிரஸ் கட்சி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து களப்பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது.
எதிரணியான அதிமுகவில் எடப்பாடியும், ஓ. பன்னீர்செல்வம் முட்டி மோதி வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை அறிவிக்கத் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆளை விடுங்க ஐயா.... என ஒவ்வொருவராகக் கும்பிடு போட்டு வருகிறார்கள் அதிமுகவினர்.
இந்த நிலையில் திமுக தேர்தல் பணிமனையைத் திறந்து, வேகமாக களப்பணி ஆற்றுவதில் அதிமுக நாங்களும் களத்தில் இறங்கி விட்டோம் என்பதை காட்ட எடப்பாடி பழனிச்சாமி 26 ஆம் தேதி காலை ஈரோட்டுக்கு நேரில் வந்துள்ளார். ஈரோடு வருவதற்கு முன்பு நசியனூர் என்ற பகுதியில் இருக்கும் அவரது குலதெய்வ கோயிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்று தனது குல தெய்வத்தை மனம் உருக வேண்டி நல்ல வேட்பாளர் கிடைக்க வேண்டும்... இந்த தேர்தலில் தன் அணிக்கு அதிக வாக்குகள் பெற்று தனக்கு மரியாதையைக் கொடுக்க வேண்டும்... அதற்கு சாமியே நீதான் அருள் புரிய வேண்டும்.. என வேண்டிக் கொண்டார். அவரோடு முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவினர் பலரும் கோயிலுக்கு வந்திருந்தனர்.
பிறகு ஈரோடு வில்லரசம் பட்டியில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் உயர்மட்ட நிர்வாகிகளோடு ஈரோடு மாவட்ட அதிமுகவினரோடும் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி, மிக விரைவாக நாம் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். வேட்பாளருக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன் செய்வார்கள் என அங்கிருந்த அதிமுகவினரிடம் அறிவித்திருக்கிறார். இதன் பிறகே அதிமுக குழுவில் கொஞ்சம் உற்சாகம் காணப்படுகிறது.