Skip to main content

‘ஏ.கே.டி. வெற்றிப் பின்னணி; திட்டமிட்டு சிங்கள தேசம் செய்த வேலை’ - சன் மாஸ்டர்

Published on 18/11/2024 | Edited on 18/11/2024
sun master interview

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அநுர குமரா திசநாயக பெரும்பான்மையாக வெற்றி பெற்றதையும் அதன் பின்னணியையும் மனித உரிமை செயற்பாட்டாளர் சன் மாஸ்டர் நம்மிடையே விவரிக்கிறார்.  

நடந்து முடிந்த 10வது நாடாளுமன்றத் தேர்தலில் 159 இடங்களைப் பிடித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளராக நின்ற தற்போதைய ஜனாதிபதி அநுர குமரா திசநாயக 42 சதவிகிதம் என்ற இலக்கை மட்டும் எட்டியிருந்தார். மறு வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் அவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தல் வெற்றிக்கு 2022ஆம் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மூலகாரணமாக இருந்தது. அந்த பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தனர். குறிப்பாக அதில் சிங்கள மக்கள் முக்கிய பங்காற்றினர்.

இலங்கையில் பெரும்பான்மை வாக்குகள் அநுர குமரா திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வந்திருக்கிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்தியதில் சிங்களவர்களுக்கு முக்கிய பங்கு இருந்திருக்கிறது. இலங்கை அரசியலை சிங்கள மக்கள்தான் தீர்மானிப்பார்கள். ஏனென்றால் அங்குள்ள தமிழர்கள் சிறுபான்மையாக இருப்பதால் இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை அவர்களிடம் இல்லை. இலங்கையில் உள்ள 74 சதவிகித மக்கள் சிங்களவர்கள் தான். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 145 இடங்களை ராஜபக்சே கைப்பற்றினார். இந்த முறை வெறும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று சுருங்கியிருக்கிறார். ராஜபக்சே கைப்பற்றிய ஒட்டுமொத்த தொகுதிகளையும் தற்போது அநுர குமரா திசநாயக கைப்பற்றியுள்ளார். முன்பு ராஜபக்சேவுக்கு வாக்குகளித்த ஓட்டுகள் அநுர குமரா திசநாயக பக்கம் திரும்பியதைத் தேசிய அலையாகக் கருதமுடியாது.

முள்ளிவாய்க்காலில் நடந்த போருக்குப் பிறகு ஒற்றை நம்பிக்கையாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அங்குள்ள தமிழர்கள் எதிர்பார்த்த அறம் சார்ந்த அரசியலைக் கொடுக்கவில்லை. காலம்காலமாக தமிழர்கள் யாரை நிறுத்தினாலும் வாக்களிப்பார்கள் என்று அங்குள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நம்பினார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததும் அவர்களை நம்பாமல் தற்போது  நேரடியாக இலங்கை அரசாங்கைத்தை ஆதரிக்கும் மனநிலை தமிழ் மக்களிடையே எழுந்தது. அதனால் இந்தமுறை வடக்கு கிழக்கில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொடுத்துள்ளனர். 2000-ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது இப்போது 11 ஆக சுருங்கியதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் தலைவர்கள் தான் காரணம். ஆனால் தமிழ் மக்கள் இன்றும் கொள்கைப் பிடிப்புடன் இருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் மக்கள் ஏன் தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்து மூன்று உறுப்பினர்களைக் கொடுத்தார்களென்றால், அங்குள்ள தமிழ் மக்கள் தற்போது வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர். அங்கிருந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6ஆக மாற்றப்பட்டு அதில் ஒரு பிரதிநிதித்துவம் சிங்கள பகுதி மக்கள் வாழும் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மக்களின் எண்ணிக்கை அங்கு குறைந்துள்ளது. இது திட்டமிட்டு சிங்கள தேசம் செய்த வேலை. தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறும் சூழலை சிங்கள தேசம்தான் உருவாக்கியது. அதனால் கடந்த 30 வருடமாக விடுதலை போராட்டத்திற்கு எதிராக இருப்பவர்களுக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

அநுர குமரா திசநாயக மற்றும் மகிந்த ராஜபக்சே ஆகியோர் யுத்த காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். சந்திரிகா ஆட்சிக் காலத்தில் அவர் தன்னை தமிழர்களிடையே சமாதானத்தின் தேவதைப்போல் காட்டிக்கொண்டு அந்த சமாதானத்திற்கு எதிரான போராட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி கட்சியை பயன்படுத்தினார். அதே போல் மகிந்த ராஜபக்சேவுக்கு ஐ.நா. எதாவது அழுத்தத்தைக் கொடுத்தால் மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் தமிழர்களுக்கு எதிராக இன வாதத்தைக் கக்குவார்கள். இனவாத முகாமாக மக்கள் விடுதலை முன்னணி கட்சி இருந்தது.          

என்னைப் பொறுத்தவரை மக்கள் விடுதலை முன்னணி கட்சி தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இடதுசாரி கட்சியான அவர்கள் சேகுவேரா, லெனினின் சித்தாந்த ரீதியில் வளர்க்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களை நம்பி வாக்களித்த தமிழர்களுக்கு விஸ்வாசமாகவும் அவர்களின் சுய உரிமைக் குரலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பை பிரித்த இதே மக்கள் விடுதலை முன்னணி கட்சி வடக்கு கிழக்கு இணைந்த சமத்துவ அரசிலை வழங்கினால்தான் உண்மையிலேயே சேகுவேரா, லெனின் போன்றவர்களின் கோட்பாடுகளுக்கு சொந்தக்காரர்கள். இல்லையென்றால் அவர்களும் இனவாதியே என்றார்.

சார்ந்த செய்திகள்