த.வெ.க. முதல் மாநாட்டிற்குப் பிறகு திராவிடம் மற்றும் தமிழ்த்தேசியம் கருத்தியல் விவாதங்கள் தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் புகழேந்தி நக்கீரன் நடத்திய நேர்காணலில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
திராவிடமா தேசியமா என்று ஒரு ஆள் பிரச்சனையைக் கிளறி வருகிறார். இப்போது எதற்கு இந்த பிரச்சனையை பேசவேண்டும். மொழி வாரியாக பிரிப்பதற்கு முன்பு சென்னை மாகாணமாகத்தான் இருந்தது. இந்தியை திணித்தபோது அதற்கு எதிராகப் போராடி தந்தை பெரியார் கைது செய்யப்பட்டார். திராவிடம் தோற்றுவிக்கப்பட்டது அல்ல தோன்றியது. குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தது தான் தேசியம். எதற்கெடுத்தாலும் தேசியம், தமிழ் தேசியம் என்று பேசி வருவார்கள். இரவீந்திரநாத் தாகூர் தெரியாமலா திராவிடம் என்ற சொல்லைத் தேசிய கீதத்தில் 1940ல் எழுதினார். 3 தலைமுறையாக அந்த பாடலை பாடியிருக்கிறோம்.
திராவிடத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு ஒடிசா பக்கம் போய்விடுங்கள். அங்கு போய் மொழிப் பிரச்சனையை உருவாக்கி பிச்சை எடுங்கள். மொழிவாரியாக கன்னடர், தெலுங்கர், மலையாளி என்று பிரிந்து இருக்கின்றனர். அதற்கு முன்பு எதாவது எல்லை பிரச்சனை இருந்ததா? தண்ணீர் பிரச்சனை இருந்ததா? அன்றைக்கே அண்ணா திராவிட நாடு வேண்டும் என்று கேட்டார். இது தெரியாமல் எங்கோ மறைந்தார் என் தலைவர் என்று பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இந்தி திணிப்பையும் தேசியத்தையும்தான் எதிரி என்று சொன்னார். நீண்ட நாளாக தமிழையும் திராவிடத்தையும் சொல்ல முடியாமல் முன்னோர்கள் இறந்துள்ளனர். அரை நூற்றாண்டு காலமாகத் திராவிட கட்சிகள்தான் ஆளுகிறது அதை எதிர்த்துப் பேசுகிறவர்கள் ஒன்றும் செய்யமுடியாது.
பொதுமக்கள் பிரச்சனை நிறைய உள்ளது அதைப் பற்றிப் பேசாமல் எதற்கு இந்த தேவையில்லாத கருத்து பிரச்சனை. அண்ணா சொன்னதுபோல் அன்றைக்கே திராவிட நாடு மலர்ந்திருந்தால் இந்த பிரச்சனை தமிழ்நாட்டில் வந்திருக்காது. திராவிடத்தை விமர்சித்தால் தி.மு.க. மட்டும்தான் எதிர்த்துக் கேட்க வேண்டுமா? முன்பு இருந்த திராவிடத் தலைவர்கள் நண்பர்களாகத்தான் இருந்தார்கள். பெரியார் இல்லையென்றால் திராவிட கழகம் இல்லை, அண்ணா இல்லையென்றால் திராவிட ஆட்சி இல்லை, கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லையென்றால் நல்ல திட்டங்கள் இல்லை. இவர்கள் அனைவரும் தமிழுக்கு சொந்தக்காரர்கள். தேசியம், தமிழ் என்று பேசிக்கொண்டிருப்பவர்களால் இங்கு பிரிவினை வராது. அவர்கள் ஒழிந்துபோகத்தான் போகிறார்கள். இங்கு இருந்தால் திராவிடர்கள்தான். இல்லையென்றால் வெளிநாட்டிற்கு ஓடிப் போய் பிழைத்துக்கொள்ளுங்கள் அல்லது இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களுக்காவது உதவியாக இருங்கள் என்றார்.