நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனுவை சென்னை அடையாறில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுலரிடம் தி.மு.க. சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அ.தி.மு.க. சார்பில் ஜெயவர்தன், பா.ஜ.க. சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இன்று (25.03.2024) தாக்கல் செய்தனர்.
இத்தகைய சூழலில் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டு இருந்தார். அதே போன்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்த பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தமிழச்சி தங்கபாண்டியன் அங்கே இருந்த தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்த உடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒருவருக்கு ஒருவர் கை குழுக்கி கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதே போன்று விருதுநகரில் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வந்த தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரனும், பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் கை குழுக்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
மேலும் நாமக்கல் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழ் மணியும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் கேபி. ராமலிங்கமும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணியும் கே.பி. ராமலிங்கத்திடம் கை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அதே போன்று ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், தி.மு.க. கூட்ட்ணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் நாவாஸ் கனியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கைகளை குழுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.