ஈரோடு மாவட்டம் கடம்பூர் வனப்பகுதி அருகே பைரமரத்தொட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாறன்(42). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் வனப்பகுதியை ஒட்டி 5 ஏக்கர் உள்ளது. நிலத்தில் தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இதனை அடுத்து இரவு நேரத்தில் தனது தோட்டத்தில் காவலில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மாறன் தனது தோட்டத்தில் காவலில் இருந்த போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று மாறன் தோட்டத்துக்குள் புகுந்து மாறனை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே மாறன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
கடம்பூர் வனத்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதற்கிடையே சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் மாறனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து நேற்று மாலை மாறனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கணவன் இறந்த தகவல் கேட்டதிலிருந்தே அவரது மனைவி சன்மதி(45) துக்கம் தாங்காமல் காலை முதல் மாலை வரை அழுது கொண்டே இருந்தார். மாறனின் உடலை எரிக்க அவரது உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது சன்மதி திடீரென நெஞ்சை பிடித்தபடி கீழே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்து மருத்துவர் மாரடைப்பால் சன்மதி இறந்து விட்டதாக தெரிவித்தார். சன்மதி உடலை பார்த்து அவரது மகளும், மகனும் கதறி அழுதனர். கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்தது மலைக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாறனின் மகனும், மகளும் யார் ஆதரவும் இன்றி தனியாக தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.