மத்தியப்பிரதேசம் அமைச்சரவையில் ஐந்து சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கி அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநில அரசு அம்மாநிலத்தின் ஜீவநாடி என கருதப்படும் நர்மதா நதியைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தனித்தனியாக பாதுகாப்புக் குழுக்களையும் அம்மாநில அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுக்கள் நர்மதா நதியைக் காப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தக் குழுக்களைச் சேர்ந்த ஐந்து சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்குவதாக மத்தியப்பிரதேசம் மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளார். கம்ப்யூட்டர் பாபா, யோகேந்திர மகந்த், நர்மதானந்தா, ஹரிகரானந்தா, பாபாயுமகாராஜ் ஆகிய இந்த ஐந்து சாமியார்களும் நர்மதா பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்றும், இவர்களுக்கு அமைச்சர்களுக்கான சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு இறுதியில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்து சாமியார்களை பாஜக அரசு அரசியலுக்காக பயன்படுத்துவதாகவும், அரசியலையும் மதத்தையும் குழப்புகிறார்கள் என்றும் அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.