சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் பாலாஜி ஜெகன்நாத்தை விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக மருத்துவரும், மருத்துவ சங்க பொதுச் செயலாளருமான ரவீந்திரநாத்தை நக்கீரன் வாயிலாகப் பேட்டி கண்டோம். அப்போது அவர் தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
சரியாக சிகிச்சையளிக்கவில்லை என்று நோயாளிகள் தரப்பில் வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றத்தில் ஈடுபட்ட நபர் பல்வேறு காரணங்களைக் கூற வாய்ப்பிருக்கிறது. மருத்துவர் பாலாஜி கோபமாக பேசியிருந்தால் அவருக்கு மேல் உள்ள தலைமை மருத்துவரிடம் விக்னேஷ் புகார் கொடுத்திருக்க வேண்டும் இல்லையென்றால் எங்களைப்போன்ற அமைப்புகளிடம் முறையிட்டிருக்க வேண்டும். அந்த மருத்துவர் கோபத்தின் பின்னணி என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனையைக் கேட்காமல் இருந்ததால் கூட கோபப்பட்டிருக்கலாம். இல்லையென்றால் விக்னேஷ் மருத்துவரை அவமதிக்கும் வகையில் பேசியிருக்கலாம் என பல்வேறு விஷயங்கள் இருக்கிறது.
பல துறைகளில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக வன்முறை செயல்களில் எல்லோரும் ஈடுபட்டால் சரியாக இருக்குமா? எனவே விக்னேஷ் தரப்பு வைக்கும் வாதங்களை முன் வைப்பதே தவறு. அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு மருத்துவர் 10 நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டிய இடத்தில் 100 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தால் கோபம் வருமா? வருதா? மற்ற வேலைகளும் மருத்துவர்களுக்கு இருக்கிறது. இப்படி இருக்கும்போது எப்படிச் சரியாக அனைத்து நோயாளிகளுக்கும் ஆலோசனை வழங்க முடியும். எனவே இந்த பிரச்சனையை பொதுவான பிரச்சனையாகத்தான் பார்க்க வேண்டும்.
மருத்துவர் சங்கமும் அரசாங்கத்தின் மேல் கோபமாக இருக்கிறது. 100 நோயாளிகளுக்கு 1 மருத்துவரை நியமனம் செய்யும் அரசாங்கத்தின் மேல் பொதுமக்களுக்கு அந்த கோபம் இருக்க வேண்டும். பொதுச் சுகாதாரத்துறை தனியார் மற்றும் வணிக மயமாக்கப்படுகிறது. அதனால் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. சமீபத்தில் ஐ.எம்.எச் என்ற மனநல காப்பகத்தை தனியார் மயமாக்க முயற்சித்தனர் அதை எதிர்த்து முதலில் மருத்துவர் சங்கம் புகார் கொடுத்தது. ஆனால் பொதுமக்கள் ஏன் கோபப்படுவதில்லை. பொதுமக்களும் குரல் கொடுக்க வேண்டும். எல்லா பிரச்சனைக்கும் மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கக் கூடாது. கடந்த ஆட்சியில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை வைத்தோம். ஆனால் விஜய பாஸ்கர் 118 மருத்துவர்களை பணியிடை மாற்றம் செய்தார். இந்த ஆட்சியிலும் அந்த கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்.
அரசு மருத்துவர்களுக்கு போதிய அளவில் ஊதியம் இல்லாததால் தனியார் கிளினிக்கில் சென்று வேலை பார்க்கின்றனர். அது அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாது. எனவே ஊதிய உயர்வு வேண்டி மருத்துவர்கள் போராடி வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் வேலை செய்யத் தடை விதித்து சட்டம் இயற்றலாம். ஆனால் அரசாங்கம் அதைச் செய்யாது. ஏனென்றால் தனியார் மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்வதால் மருத்துவத் துறைக்கு செலவு குறைகிறது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத் துறையில் 2500 மருத்துவ பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். காலி பணியிடங்களை நிரப்ப வரும் ஜனவரி மாதம் தேர்வு வைக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். 2500 காலி பணியிடங்கள் இருந்தால் பொது மக்களுக்கும் பாதிப்பு வரும். இதே போல் மருத்து துறையில் செவிலியர், ஹெல்த் இன்ஸ்பெக்டர் போன்ற ஏராளமான காலி பணியிடங்கள் இருக்கிறது.
பத்து ஆண்டுக்கு முன்பு இருந்த மருத்துவர்கள் இன்னமும் மருத்துவத் துறையில் சேவை செய்கின்றனர். இன்றைக்கு நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு பெரும் அளவில் நோயாளிகள் இருக்கின்றனர். இந்தியா சுகாதாரத்திற்கு குறைவான சதவிகிதத்தில் நிதி ஒதுக்கியுள்ளது. அதை அதிகரித்தால் ஏராளமான மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் உருவாக்கி நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்க முடியும். மருத்துவர் நோயாளிகளைக் கவனிக்காமல் நோயாளிகளின் குடும்பத்திற்கு கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டு இருக்க முடியுமா? தனியார் மருத்துவமனைகளில் அனைத்து கட்டமைப்புகளும் இருக்கும்போது அரசாங்கம் அதைச் செய்தால் என்ன? தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அரசு ஏன் பயன்படுத்தக் கூடாது. நடந்த பிரச்சனையைத் தனிப்பட்ட மருத்துவர் மற்றும் நோயாளி பிரச்சனையாகப் பார்க்காமல். மருத்துவத்துறை நெருக்கடி என்று சொல்ல வேண்டும். அதன் விளைவாகத்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தனிப்பட்ட முறையில் மருத்துவர் பாலாஜி மிகச்சிறந்த நல்ல மருத்துவர். மனிதாபிமானமாக நடக்கக்கூடியவர். கோபம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அது மனித இயல்பு. அவர் கோபப்படும் அளவிற்குத் தூண்டப்பட்ட காரணத்தை யோசிக்க வேண்டும். எங்களுக்கு கிடைத்த செய்தி என்னவென்றால் சம்பவம் நடந்த நாளுக்கு முந்தைய நாளில் மருத்துவர் பாலாஜியிடம் விக்னேஷ் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். இதை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். விக்னேஷ் நல்லவராகக் கூட இருக்கலாம். ஆனால் அவரின் அப்பா சில மாதங்களுக்கு முன்பு இறந்திருக்கிறார். தாயும் நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவரும் இதய நோயாளி என்று சொல்கிறார்கள். இந்த காரணங்களால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு வன்முறையில் ஈடுபட்டிருக்கலாம். இருந்தாலும் விக்னேஷ் செய்தது தவறு.
தனியார் மருத்துவமனையில் கூறிய ஆலோசனை வைத்து மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் தாக்கியதாகச் சொல்கிறார்கள். பொதுவாக நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கின்றோம் என்பதை வைத்துத்தான் நமது சிந்தனை வெளிப்படுகிறது என்று கார்ல் மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். முதலாளித்துவ சமூகத்தில் நாம் வாழும்போது மருத்துவர்கள் மட்டும் சோசலிஸ்ட் சிந்தனையுடன் வரமாட்டார்கள். அவர்களுக்கும் வணிக நோக்கம் இருக்கிறது. இதனால் மருத்துவத்துறை வேகமாகத் தனியார் மயமாக்கப்பட்டு மருத்துவர்களிடையே போட்டி பொறாமை இருந்து வருகிறது. இந்த சமூகம் மருத்துவர்களை வணிக நோக்கத்தோடு சிந்திக்க வைப்பதால் தேவையில்லாமல் மருத்துவர்கள் பொறாமையில் மற்ற மருத்துவர்களைக் குறை சொல்கின்றனர். இது சமூக சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது அதில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழக அரசு மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்ததுள்ளது. அந்த வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும் என்று மருத்துவ சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.