கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் செங்குட்டுவன் (65) ஓய்வுப் பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர். இவரது மனைவி பானுமதி (60) மகன் கயல்வேந்தன் (35) இவர் அந்தமானில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். மகன் கயல்வேந்தனுக்கும் புவனகிரியை அடுத்த வீரமுடையாநத்தம் அருள்பிரகாசம் என்பவரின் மகள் கயல்விழி (29)க்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
மகன் அந்தமானில் வேலை செய்வதால், மருமகள் மாமனார் மாமியாருடன் இருந்து வந்தார். வீட்டில் மருமகள் கயல்விழியிடம் கூடுதலாக வரதட்சனைக் கேட்டு மாமனார் மாமியார் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கணவரிடம் பல முறை கூறியும் கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் மனமுடைந்த கயல்விழி பூச்சிமருந்தை குடித்து மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து இறந்துப்போன கயல்விழி பெற்றோர், உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு, இறப்பிற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சேத்தியாத்தோப்பு சரக டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள். அனைவரையும் கைது செய்யப்படுவர் என தெரிவித்ததால் சமாதானம் அடைந்தனர்.
இது குறித்து உயிரிழந்தபெண்ணின் தாய் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் மாமனார் செங்குட்டுவன், கணவர் கயல்வேந்தன், மாமியார் பானுமதி, செங்குட்டுவன், கடைசி மகள் கயல்விழி(நாத்தனர்) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து மாமனார் செங்குட்டுவன், மாமியார் பானுமதியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.