Skip to main content

கொஞ்சம் உதவி பண்ணுங்கயா.... கலைஞர் போட்ட உத்தரவு ரத்தா? எடப்பாடி வெளியிட்ட அறிக்கை... கண் கலங்க வைத்த முதியவர்கள்! 

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதுமையிலும் வறுமையிலும் வாடிய பெற்றோர்களின் அவல நிலையை, "முதியோர் வாழ்க்கை முதல்வரின் பார்வைக்கு'’என்ற தலைப்பில் 31-10-2007-ல் நக்கீரன் இதழில் கட்டுரை வெளியானது.

அப்போதைய முதல்வர் கலைஞர் இந்த செய்தியைப் படித்துவிட்டு, இரண்டே நாட்களில், ஆண் வாரிசு இருந்தாலும் கூட வறுமையில் வாடும் முதியோர்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து உத்தரவிட்டார். அதற்கு முன்பு ஆண் வாரிசு இல்லாமல் 65வயது கடந்த முதியோர்கள் மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நக்கீரன் செய்தியினால் விரிவடைந்தது. இதன் மூலம் 2015 வரை தமிழக அளவில் 30 லட்சத்து 35 ஆயிரம் பேர் பயன்பெற்று வந்தனர்.

 

incident



அ.தி.மு.க. அரசு 5 லட்சத்து 81 ஆயிரம் பேர்களை தகுதி நீக்கம் செய்ததோடு புதிய பயனாளிகளுக்கான அனுமதி உத்தரவையும் நிறுத்தியது. அதனால் 2019ஆம் ஆண்டு வரை சுமார் 1 கோடி பேர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துக் காத்திருந்த நிலையில், 2019 இறுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும்’’ என உத்தரவிட்டார். யானைப்பசிக்கு சோளப்பொறியாக அமைந்தது அந்த உத்தரவு.

உதவித்தொகை கேட்டு, நம்மைத் தொடர்பு கொண்ட, தொளார், புத்தேரி, செங்கமேடு, கொட்டாரம் அண்ணாநகர், பெ.பூவனூர், கொடிக்களம், கூடலூர், காஞ்சிராங்குளம், திட்டக்குடி, ஆலத்தூர் உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் 200-க்கும் மேற்பபட்டவர்களுக்கு திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் மூலம் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

சமூக நல வட்டாட்சியர்களாக ஏற்கனவே பணியில் இருந்த தணிகாச்சலம், ராஜா, கண்ணன் போன்றவர்கள் மூலமும், தற்போது பணி செய்துவரும் சமூக நல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தகுதிவாய்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அரசு உதவிகள் உரிய பயனாளிகளுக்குச் சென்று சேருவதற்கு இடைத்தரகர்களின் தலையீடுகள் இல்லாமல் பயனாளிகள் பயனடைந்து வருகிறார்கள்.
 

dmk



"முதல்வர் அறிவித்த 5 லட்சம் பேரில் திட்டக்குடி தாலுகாவில் மட்டும் 1050 பேருக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தாலுகாவில் மட்டும் 23000 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் எங்களிடம் மனுகொடுத்த பிறகு தகுதியுள்ள பயனாளிகளைத் தேர்வு செய்து அரசு ஒதுக்கும் நிதியை அவர்களுக்கு முறையாகக் கிடைக்கச் செய்கிறோம். ஆதரவற்ற இம்மக்களுக்கு அரசின் அனுமதியோடும் மனநிறைவோடும் பணிசெய்து வருகிறோம்'' என்கிறார் வட்டாட்சியர் ரவிச்சந்திரன்.


இப்படிப்பட்ட நிலையில், உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் மக்களுக்கு வேட்டுவைக்கும் செய்தியாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக வருவாய் நிர்வாக மேலான்மை ஆணையர் ராதாகிருஷ் ணன் ஜனவரி 29-ல் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், சமூக பாதுகாப்பு முதியோர் ஓய்வூதியம் பெறும் விதிகளில் தகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், அதன்படி 20 வயதுக்கு மேற்பட்ட மகன், பேரன் கணவர், மனைவி என்ற உறவுகள் இல்லாதவர்கள், ஒருலட்சம் ரூபாய்க்குக் குறைவான மதிப்புள்ள அசையா சொத்து உள்ளவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கும் என்றும், அப்படிப்பட்ட பயனாளிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பில் உள்ளது.

2007-ல் கலைஞர் முதல்வராக இருந்த போது போடப்பட்ட உத்தரவுக்கு எதிராகவும், அதை ரத்து செய்யும் வகையிலும் இந்த சுற்றறிக்கை அமைந்துள்ளது. இது தங்களுக்கு வேட்டு வைக்கும் அறிவிப்பாக உள்ளதால், உதவிக்கரம் கேட்டு காத்திருக்கும் ஆதரவற்ற முதியோர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்