திருப்பத்தூர் நகர்மன்றத்தில் 36 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியான திமுக 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 05 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பாமக, மதிமுக, காங்கிரஸ் தலா ஓரிடம், சுயேட்சைகள் 5 இடங்கள் என வெற்றி பெற்றுள்ளன. அதிமுக வேட்பாளர்கள் 14 வார்டுகளில் டெபாசிட் இழந்து அதிமுக பிரமுகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளார்கள்.
நகர் மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என தேர்தல் அறிவிப்புக்கு முன்புவரை திருப்பத்தூர் நகரத்திலுள்ள திருப்பத்தூர் திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ நல்லதம்பி தரப்பு சிலர் முயற்சி செய்தனர். திருப்பத்தூர் நகரத்திலுள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யாரும் நகர்மன்றத் தலைவராக வந்துவிடக்கூடாது என்பதற்காக, நகர்மன்றத் தலைவர் பதவியை பட்டியலின பெண்கள் என ஒதுக்கப்பட்டது. இதனால் அனைத்து தரப்புமே அதிர்ச்சியானது. தனக்கு போட்டியாக யாரும் வளர்ந்துவிடக்கூடாது, பொருளாதார ரீதியாக யாரும் வளர்ந்துவிடக்கூடாது என திமுக மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏவான தேவராஜ் தான் இப்படி செய்தார் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சேர்மன் பதவி பட்டியலின பெண்களுக்கு என்றதால் பெரியதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.
தேர்தல் முடிந்து ஆளுங்கட்சியான திமுக பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. நான் முதலியார் சமூகம், என் மனைவி பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் இரண்டு சமூகத்தையும் அரவணைக்கும் விதமாக என் மனைவிக்கு சேர்மன் சீட் தாருங்கள் எனக் கேட்கிறார் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐய்யப்பன். கவுன்சிலர்களுக்கு தருவதற்காக ரூபாய் 2 கோடி தயாராகவுள்ளது என தன் பலத்தை காட்டியுள்ளார்.
திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன், தான் போட்டியிட நினைத்த பொது வார்டில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சங்கீதா என்பவரை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். நான் சேர்மனாகிவிடக்கூடாது என முடிவு செய்து சேர்மன் பதவியை பட்டியலினத்துக்கு ஒதுக்க வைத்தீர்கள். நகரத்தில் 30 வருடங்களாக கட்சியை கட்டுகோப்பாக வைத்திருக்கிறேன், கவுன்சிலர்களை வெற்றி பெறவைக்கிறேன், நான் சொல்லும் நபரைத்தான் சேர்மனாக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ்யிடம் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கிறார்.
தொகுதி எம்.எல்.ஏ நல்லதம்பி, நகரச் செயலாளர் முன்னிறுத்தும் பெண்மணி கட்சி போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளாரா? எதுக்கு அவரை சேர்மனாக்கனும்? கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் வெற்றி பெற்றிருக்காங்க. அதிலிருந்து யாரையாவது செலக்ட் செய்யனும் என மாவட்ட செயலாளரிடம் கூறினாராம். இது எம்.எல்.ஏ மற்றும் நகரச் செயலாளர் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
ஜவுளி தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதாவும் 3 கோடி வரை சேர்மன் தேர்தலுக்காக செலவு செய்யத் தயார் என்றதால் சேர்மன் வேட்பாளராக அவரை தேர்வு செய்துவிட்டார்கள் என்கிறார்கள் திமுகவினர்.