நமது மரபுச் சின்னங்களை இளைய தலைமுறையினர் அறிந்து, பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தமிழ்நாட்டில் உள்ள உலக மரபுச் சின்னங்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
யுனெஸ்கோ நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தொல்லியல், பாரம்பரியம் மிக்க இடங்களை உலக மரபுச் சின்னங்களாக அறிவிக்கிறது. இதில் இயற்கைப் பாரம்பரியச் சின்னங்களும் அடங்கும். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய வாழும் சோழர் கோவில்கள், மாமல்லபுரம் பல்லவர் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை இரயில் பாதை, மேற்குத் தொடர்ச்சி மலை எனும் இயற்கைப் பாரம்பரியக் களம் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள உலகப் மரபுச் சின்னங்கள் ஆகும். உலக அளவில் நமது மரபுச் சின்னங்கள் கவனம் பெறுவதற்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் உதவுகிறது. இவை தமிழர்களின் கோயில், சிற்பம், ஓவியக்கலை, இயற்கைச் சிறப்பிற்கு சான்றாக உள்ளது.
இதுபற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது,
தஞ்சாவூர் பெரியக் கோவில்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூரில், காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது மிகப் பிரமாண்டமான பெரிய கோவில். இது முழுவதும் கற்களால் கட்டப்பட்ட சிவனுக்கான கற்றளி ஆகும். இந்தியாவிலுள்ள பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் இக்கோவிலைக் கட்டுவித்தான். இது கி.பி.1003 முதல் கி.பி.1010 வரையில் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
இரண்டு, மூன்று தளங்கள் கொண்ட கோவில்கள் மட்டுமே கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், ஏறத்தாழ 50 கி.மீ. தூரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கற்களைக் கொண்டு, 240 மீட்டர் நீளமும், 120 மீட்டர் அகலமும் கொண்ட பெரும் பரப்பில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேரளாந்தகன் திருவாயில், ராஜராஜன் திருவாயில், விக்கிரமசோழன் திருவாயில் ஆகிய கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன.
விமானம் பெரியதாகவும், கோபுரம் சிறியதாகவும் உள்ளது இதன் சிறப்பு. இதன் விமானம் 15 தளங்களுடன் 216 அடி உயரத்தில் எகிப்து பிரமிடுகளைப் போல அமைந்துள்ளது. இக்கோயில் இரட்டை சுவர்கள் கொண்ட அடித்தளம் கொண்டுள்ளது. கருவறையைச் சுற்றிவரும் வகையில் திருச்சுற்று அமைக்கப்பட்டு அதன் சுவர்களில் ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன.
விமானத்தில் எங்கும் செங்கலோ, மரமோ பயன்படுத்தப்படவில்லை. கற்களை இணைப்பதற்கு சாந்து எதுவும் இல்லை. கற்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள கற்களின் அழுத்தத்தில் கீழுள்ள கற்கள் நிற்கின்றன. இதன் விமான நிழல் தரையில் விழாது என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் நிழல் தரையில் விழும் என்பதே உண்மை.
மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரியச் சின்னங்களை குடைவரைக் கோவில்கள், ஒற்றைக்கற்றளிகள், கட்டுமானக் கோயில்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவை அனைத்தும் பல்லவர்களால் கி.பி.7-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. கடற்கரைக் கோவில்கள், ரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்றவை சிறப்பு வாய்ந்தவை.
பெரும்பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்து குடைவரைக் கோயில்கள் உருவாக்கப்படுகின்றன. மாமல்லபுரத்தில் வராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம், இராமானுஜ மண்டபம் உள்ளிட்டவை குடைவரைக் கோயில்கள் ஆகும்.
இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கி தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோவில், தேர் போலக் காட்சியளிப்பதால் ரதம் என அழைக்கப்படுகிறது. இவை பிற்காலக் கோயில்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. இங்குள்ள ஐந்து ரதங்கள் பஞ்சபாண்டவர்கள் பெயரை பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையன அல்ல. தர்மராஜன் மற்றும் அருச்சுனன் ரதங்கள் மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்துடனும், பீம ரதம் சாலை வடிவிலான சிகரத்துடனும், திரௌபதி ரதம் சதுரமான குடிசை போன்ற சிகரத்துடனும், சகாதேவ ரதம் கஜபிருஷ்ட சிகரத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று கட்டுமானக் கோவில்கள் உள்ளன. இதில் கடற்கரைக் கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோவில் இருந்திருக்கிறது. அதன் இரு பக்கங்களிலும் இரு சிவன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் சுமார் 30மீட்டர் உயரமும், 60மீட்டர் அகலமும் கொண்ட பாறையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பத் தொகுதியை அருச்சுனன் தபசு என்கிறார்கள். மாமல்லபுரத்தின் அதிசயம் என்றே இவற்றைக் குறிப்பிடவேண்டும். ஒரு பாறையில் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். குரங்குகள் அமர்ந்திருப்பது, மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்வது, யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை நதி வரை படையெடுத்துச் சென்று வடக்கேயுள்ள அரசர்களை வென்றதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஒரு புதிய நகரத்தையும், தஞ்சையில் உள்ளது போன்ற பிரமாண்டமான ஒரு சிவன் கோயிலையும் கி.பி.1036-ல் கட்டியுள்ளான்.
ஓங்கி உயர்ந்து நிற்கும் கோவில் விமானம் கீழே சதுரமாகவும், அதற்கு மேல் எட்டுப்பட்டை வடிவிலும், உச்சியில் வட்ட வடிவிலும் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்திலும், மகாமண்டபத்திலும் ஒரே கல்லால் ஆன 12அடி உயர துவார பாலகர்களின் சிற்பங்களைக் காணலாம். கோவில் விமானத்தின் உயரம் 180 அடி. இது தஞ்சாவூர் பெரிய கோவில் விமானத்தைவிட 10 அடி குறைவானது. லிங்கம் 13 அடி உயரமுள்ளது. இது தஞ்சை கோவில் லிங்கத்தை விட பெரியது. கருவறையைச் சுற்றி ஐந்து சிறிய கோவில்களும், சிம்மக்கிணறும் உள்ளன. கருவறை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் அங்கு சந்திரகாந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளது. மூவர்உலா, தக்கயாகப்பரணி போன்ற நூல்களில் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
தாராசுரம்
கும்பகோணம் அருகில் உள்ளது தாராசுரம். இங்கு கட்டடக்கலை, சிற்பக்கலைக்குப் பெயர் பெற்ற ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளது. முதலாம் ராஜராஜசோழனின் கொள்ளுப் பேரனான இரண்டாம் ராஜராஜனால் கி.பி.12-ம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது.
இதன் விமானம் ஐந்து தளங்களுடன் 80 அடி உயரம் கொண்டது. தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோவில்களை விடச் சிறியதாக இருப்பினும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளால் சிறந்து விளங்குகிறது. யானை, காளை ஆகிய இரண்டும் இணைந்த ரிஷபகுஞ்சரம் சிற்பம், நடன மாது ஒருவர் இரண்டு தாள வாத்தியக்காரர்களோடு இணைந்து 4 கால்களோடு ஆடும் சிற்பம் ஆகியவை புகழ்பெற்றவை.
ராஜகம்பீரன் மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில் நுணுக்கமான பல சிற்பங்கள் உள்ளன. பலிபீடத்தின் படிகள், தட்டும்போது சரிகமபதநி என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.
மகாமண்டபத் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கையில் வீணையில்லாத சரஸ்வதி, நாகராஜன், அன்னபூரணி, எட்டுக்கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், குழலூதும் சிவன் என பிற கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு உள்ளன.
நீலகிரி மலை ரயில்
நீலகிரி மலை ரயில் பாதை 1,000 மில்லி மீட்டர் அளவு கொண்ட குறுகியப் பாதை வகை ரயில் போக்குவரத்து ஆகும். தெற்கு ரயில்வே இப்பாதையில் ரயில்களை இயக்குகிறது. இந்தியாவிலுள்ள பற்சக்கர ரயில் பாதை நீலகிரி மலை ரயில் பாதை மட்டுமே ஆகும். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை பற்சட்டம் மற்றும் பற்சக்கரங்களால் இயங்கும் நீராவி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. குன்னூரில் இருந்து உதகமண்டலம் வரையுள்ள பாதையில் மட்டும் டீசல் இயந்திரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் 1854ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி வரை ஒரு மலைப்பாதையை அமைக்கத் திட்டமிட்டனர். ஆனால் 1899-ல் தான் இப்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. நீலகிரி மலை இரயில்வே எக்சு வகை நீராவி பற்சட்ட இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது. சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் இவ்வியந்திரத்தை தயாரித்துள்ளது. குன்னூரில் இருந்து உதகமண்டலம் செல்லும் பயணிகளுக்கு இந்த இழுபொறியால் நீலகிரி மலை ரயில் பயணத்திற்கு ஒரு தனித்துவமான அழகு கிடைக்கிறது. இப்பாதை 46 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இதில் 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் உள்ளன. இதில் பயணிப்பது இனிய அனுபவம் ஆகும். இது ஆசியாவில் மிகக் கடுமையான சரிவு பாதையாகக் கருதப்படுகிறது. இப்பாதையில் மேட்டுப்பாளையம், குன்னூர், வெல்லிங்டன், அரவங்காடு, கேத்தி, லவ்டேல், உதகமண்டலம் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
மேற்குத் தொடர்ச்சி மலை இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும். இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.
இம்மலைத்தொடர் தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும், தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும்.
இம்மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இம்மலைத்தொடர் முற்காலத்தில் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் பகுதிகளோடு இணைந்திருந்தது. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென்னிந்தியப் பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்துள்ளன.
சுமார் 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும். இன்றும் மராட்டிய மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எரிமலை இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன. இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு பிற்காலத்தில் அரிய தாவரங்களும் விலங்குகளும் உருவாக காரணமானது.
தென்னிந்தியாவின் பல முக்கிய ஆறுகளான கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, வைகை ஆகியவை மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. இவை தவிர பல சிறு ஆறுகள் இங்கு உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன' இவ்வாறு அவர் கூறினார்.