‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் மூத்த வழக்கறிஞர் பாலு, அண்மையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பாடங்கள் குறித்து கடுமையாக விமர்சித்ததைப் பற்றி தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
ஆளுநர் இந்தி மொழியைத் தேசிய மொழி என்றும் சமஸ்கிருத மொழியைத் தேவ மொழி என்றும் நினைப்பவர். இந்த இரண்டு மொழியில் எதாவது ஒன்றைப் பேசித் தொலைந்தால் பரவாயில்லை. ஆனால் ஆங்கிலேயர்களால் வரலாறு காணாமல் போய்விட்டது என்று ஆங்கிலத்தில் பேசி உயர் பதவிக்கு வந்திருக்கிறார். இந்த பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு ஆங்கிலேயர் கொடுத்தது கெட்டுப் போனது என்று பேசும் ஆளுநருக்கு எதற்கு 120 ஏக்கர் மாளிகை? வெளியில் வந்து 3 பி.எச்.கே வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே? அவருக்கு எதற்கு ஒய் வகை சிறப்பு பாதுகாப்பு?
திராவிட கட்சிகள் ஆளுநருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் எதாவது பேசி தூங்கிக்கொண்டிருந்த சோம்பேறிகளைப் படிக்க வைத்துவிட்டார். முன்பு இருந்ததுபோல் திராவிடக் கட்சிகள் தீவிரமாகச் செயல்படவில்லை என்ற வருத்தம் இருந்தது. ஆனால் அவர்களை ஆளுநர் எழுப்பிவிட்டார். பள்ளிகளில் திராவிட வரலாறு மட்டும்தான் இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி இல்லை என்று ஆளுநர் பேசுகிறார். சத்திரபதி சிவாஜி, ஜான்சி ராணி, மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி பள்ளியில் படித்துள்ளோம்.
ஆன்மீகத்தை எடுத்துக்கொண்டால் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், புறநானூறு, தேம்பாவணி, பெரிய புராணம் உள்ளிட்ட பல நூல்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். இதையெல்லாம் திராவிடக் கட்சிகள் சொல்லிக்கொடுக்காமல் பீகாரிலுள்ளவரா சொல்லிக்கொடுத்தார்? சவார்க்கர் பற்றிச் சொல்லித்தர வேண்டுமா? அவரை பற்றி சொல்லிதர வேண்டுமென்றால் அவர் எழுதிய மன்னிப்பு கடிதங்களை உளவியல் ரீதியாக எதன் அடிப்படையில் எழுதப்பட்டது என்று ஆய்வுக்குட்படுத்த வேண்டும். சுதந்திரப் போராட்டம் பற்றிய அனைத்து பதிவுகளும் இருக்கிறது. பீகாரிலிருந்து வந்து பாடம் எடுக்கும் அளவிற்கு இங்கு யாரும் முட்டாள் இல்லை. பட்டியலினத்தைச் சேர்ந்த 100 பேருக்கு ஆளுநர் பூணூல் அணிவித்தார். இப்போது அவர்களுக்கு என்னானது? சனாதனம் அவர்களை என்னவாக பார்க்கிறது? அந்த 100 பேர் இப்போது எங்கே?
கடந்த 2022ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பாரதியார், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வ.உ.சி, வீரபாண்டிய கட்ட பொம்மன் ஆகியோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருந்த வண்டிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அன்றைக்கு ஏன் ஆளுநர் மௌனமாக இருந்தார்? ஆனால், தமிழ்நாடு அரசு அந்த வண்டிகளை வைத்து பேரணி நடத்தியது. ஆளுநர் தொடர்ந்து திராவிடத்தைப் பற்றிப் பேசினால் பா.ஜ.க.-விற்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகமாகிக்கொண்டேதான் இருக்கும். அந்த கட்சியைக் கெடுப்பதற்கு தி.மு.க. பி டீமாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இப்படிப் பேசி பேசியே தி.மு.க.-வின் வளர்ச்சிக்கு ஆளுநர் பாடுபட்டு வருகிறார். ஆளுநர் மீது வழக்குப் போட முடியாது என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தித் தொடர்ந்து ஒரு இனத்தை அவர் கொச்சைப்படுத்தி வருகிறார். இதற்கு அடிப்படை காரணம் பின்னாடி இருந்து ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுக்கும் அந்த 3% தான் என்றார்.