உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சிறு வயதில் பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங்கைப் பற்றி விவரிக்கிறார்.
வெளிநாட்டிலிருந்து ஒரு பெண் என்னைத் தொடர்பு கொண்டார். அப்பெண்ணுடன் பேசுகையில், கணவர் மற்றும் குழந்தையுடன் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வதாகவும் இரவு தூங்கும்போது திடீரென எழுந்து சத்தம் போட்டுக் அலறி வித்தியாசமாக நடந்துகொள்வதாகவும் கூறினாள். மேலும் அந்த பிரச்சனைக்குத் தொடர்ந்து மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனை கேட்டு வருவதாகக் கூறி இன்னும் அந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியவில்லை என்றார். அதோடு அந்த பிரச்சனையால் கணவரும் குழந்தையும் வேதனைப்படுகிறார்கள் என்றும் வாரத்திற்கு ஒருமுறையாவது இரவில் அந்த பிரச்சனை தனக்கு நடக்கிறது என்றும் கூறினார்.
அதன் பிறகு நான் அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்க தொடங்கினேன். ஒரு பிரச்சனை இருக்கிறதென்றால் அதற்கான தொடக்கப் புள்ளி இருக்கும். அதைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசி வந்தேன். அப்பெண் இலங்கை வாழ் தமிழர் என்பதால் அங்கு நடந்த போருக்குப் பிறகு அகதியாக வெளிநாடு சென்று படித்து இன்று நல்ல நிலைமையில் வாழ்ந்து வருவது தெரிந்தது. இது குறித்து விரிவாக விசாரித்தபோது, போர் காலகட்டத்தில் அந்த பெண் சிறுமியாக இருந்துள்ளார். அப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்கள் அந்த பெண்ணுக்கும் நடந்திருக்கிறது. இது அந்த பெண்ணுக்கு மறக்க முடியாத ஆறாத் தழும்பாக மனதில் பதிந்து, அவ்வப்போது இரவில் வெளிப்பட்டிருந்திருக்கிறது.
மேற்கண்டதை பிரச்சனைக்கான ஆரம்பப் புள்ளியாகத் தெரிந்துகொண்ட பிறகு, அந்த பெண் தனக்கு அநீதி இழைத்தவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறினார். பின்பு நான், அந்த பெண்ணுக்கு இரண்டு விதமான கவுன்சிலிங் கொடுக்க நேர்ந்தது. ஒன்று அப்பெண்ணுக்கு நடந்த அநீதியை மறக்கச் செய்வது. மற்றொன்று கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவரிடமிருந்து நீக்குவது. முதலில் அந்த பெண்ணுக்கு மறக்கச் செய்வதற்கான வழிகளைக் கூறினேன். மனிதராகப் பிறந்ததற்கே சந்தோசப்படுகின்றேன் என்ற எண்ணத்தை உணர வைக்க, போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுக்கான கல்விச் செலவுகளைச் செய்து அவர்களைப் பராமரிக்கச் சொன்னேன். அந்த பெண் வேலை செய்யக்கூடிய நிறுவனம் சர்வதேச அளவில் தொடர்புடையதாக இருப்பதால், போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க அவருக்குக் கஷ்டமாக இல்லை. அந்த பெண் தொடர்ந்து போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்தபோது, மனமகிழ்ச்சியால் தனக்கு இருந்த ஆறாத் தழும்புக்கு மருந்து போட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் இருக்கும் வன்முறை எண்ணங்களை நீக்கத் தினமும் ஒரு டாஸ்க் கொடுத்தேன். அது என்னவென்றால் பாஸ்(Pause) என்பதை விளையாட்டைக் கற்றுக்கொடுத்தேன். எதாவது ஒரு செயலை செய்யும்போது பாஸ் என்று கூறினால், செய்த வேலையை அப்படியே விட்டுவிட்டு நிற்க வேண்டும். முதலில் இதை விளையாட்டாகக் கற்றுக்கொடுத்தேன். அவரும் சிரித்தபடி செய்யத் தொடங்கினார். அந்த பெண் மனதில் ஆழமாக இந்த பாஸ் செயல்முறையைப் பதிய வைப்பதற்காகத் கோபப்படும் நேரத்தில் அந்த பாஸ் செயல்முறையைச் செய்யுங்கள் என்றேன். ஒரு கட்டத்தில் அந்த பெண் என்னிடம், சார் ஒரு முறை பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது. அப்போது கையில் கத்தியை வைத்தபடி பாஸ் செயல்முறையைச் செய்து பார்த்தேன் சிரிப்பாக இருந்தது என்றார். நான் சொன்ன செயல்முறையைத் தொடர்ந்து அந்த பெண் செய்ததால் இலகுவாக தனக்கு இருந்த பிரச்சனையைவிட்டுக் கடந்து சென்றார். நம்முடைய வாழ்க்கையிலும் இதுபோல எந்த பிரச்சனை வந்தாலும் அதை வன்முறையாகக் கையாளாமல், வன்முறைக்கு பாஸ் சொல்லிவிட்டு வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும். வெற்றிதான் உலகில் சிறந்த பழிவாங்குதல் அதைச் செய்ய முயற்சி செய்யுங்கள் என்றார்.