வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வலையர் வாழ்வுரிமை மாநாட்டை 31-01.2021-ந்தேதி நடத்துகிறார் அச்சங்கத்தின் நிறுவனர் தலைவர் கே.கே. செல்வக்குமார் ! ஒத்தக்கடை பகுதியில் நடக்கும் இந்த மாநாட்டில் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
முதல்வர் எடப்பாடி கலந்து கொள்ளும் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது என்கிறார்கள் அதிமுகவின் தலைமைக் கழக வட்டாரத்தினர்.
இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள், ‘’முத்தரையர்கள் நடத்தும் அந்த மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என எடப்பாடியை சந்தித்து கோரிக்கை வைத்தனர் சங்கத்தின் நிர்வாகிகள். எடப்பாடியோ, யோசித்துச் சொல்கிறேன் என்றவர் ஒரு வாரமாக எதுவும் சொல்லவில்லை.
இதனையடுத்து. பாஜக தலைவர் முருகனை சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் வருவதாக உறுதி தந்திருக்கிறார். இதனை நிரூபிக்கும் வகையில், ’வெற்றியடையப் போவது உங்கள் மாநாடு மட்டுமல்ல ; அரசியல் அங்கீகாரமும் உரிமைகளும்தான்! உங்கள் உரிமைகள் வெற்றியடைய பிரதம மோடிஜியும், அமித்ஷாவும், ஜே.பி. நட்டாவும் துணை நிற்பார்கள். மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்‘ என பாஜகவின் கலை இலக்கிய அணி தலைவர் காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், பாஜக முருகனும் பாஜக நிர்வாகிகளும் முத்தரையர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவிருப்பதை அறிந்த முதல்வர் எடப்பாடி, சங்கத்தின் தலைவரை தொடர்பு கொண்டு, மாநாட்டில் நான் கலந்து கொள்கிறேன் என சொல்ல, அதன் பிறகு எடப்பாடி கலந்து கொள்வதாக அழைப்பிதழ் அச்சிடப்பட்டது.
அதாவது, முத்தரையர்கள் பெரும்பாலும் அதிமுக ஆதரவு மனநிலையில் இருப்பவர்கள். பாஜக தலைவர் முருகன் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு அவருக்கான முக்கியத்துவத்தை சங்கத்தின் நிர்வாகிகள் தருகிறபட்சத்தில் முத்தரையர் சமூகத்தை பாஜக கையிலெடுக்கும். அதனை உணர்ந்துதான் அவசரம் அவசரமாக, நிர்வாகிகளை தொடர்பு கொண்டு மாநாட்டில் கலந்து கொள்வதாக முதல்வர் ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்.