நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி தடங்கம் கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்து விடாமல் தடுக்க ஜனநாயக சத்திகளும் நாட்டு மக்களும் களம் கண்டுள்ள போர் இது. நாம் நடத்தும் இரண்டாவது விடுதலை போராட்டத்திற்கான கட்டியம் கூறும் தேர்தல் இது. பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழிப்பதை தடுக்க தான் ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டுள்ளன. ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும், எதிர்கால சந்ததியினரை காக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது நடக்க இருப்பது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் ஆகும்.
சமூக நீதிக்கு சவக்குழியை தோண்டும் கட்சி தான் பா.ஜ.க.. சமூக நீதி, சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய கட்சிதான் பா.ஜ.க. சமூக நீதியை பாதுகாக்க வேண்டும், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும், பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டின் தேசியக் கொடி கம்பீரமாக செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால் பா.ஜ.க. வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
சமூக நீதி பேசும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் எதற்கு கூட்டணி அமைத்தார் என்பது தங்கமலை ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. மக்களுக்கும் பா.ம.க.வினருக்கும் அதற்கான காரணம் நன்றாகவே தெரியும். பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்ததை அக்கட்சியினராலேயே ஜீரணிக்க முடியவில்லை. வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக தி.மு.க. போராடியது. பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு” எனப் பேசினார்.