ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதே சமயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 4 ஆவது நாளாக வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதேபோல், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தமிழகம் முழுவதும் உள்ள எங்கள் நிர்வாகிகள் ஈரோட்டிற்கு 5 ஆம் தேதி வந்து விடுவார்கள். 10ம் தேதிக்குள் அவர்கள் எனக்கான பிரச்சார தேதியை ஒதுக்கிய பின் நான் ஈரோட்டிற்கு செல்வேன்.
செய்த தவறை மீண்டும் செய்யாமல் எல்லோரும் ஒரே அணியில் கூட்டணியில் இணைந்து திமுகவை எதிர்க்க விரும்பும் கட்சிகளோடு கூட்டணி வைத்து முழுமூச்சோடு எதிர்த்தால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியும். தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தினால் ஆதரவு கொடுப்பீர்களா எனக் கேட்கின்றனர். எங்கள் வேட்பாளர் கூட பொது வேட்பாளராக இருக்கலாம். அந்த தொகுதியிலேயே பிறந்து வளர்ந்த இளைஞர். இது நல்ல யோசனைதான். திமுகவை வீழ்த்த பொது வேட்பாளர் அவசியம் தான். ஆனால் அது எப்படி வருகிறதென்று பார்ப்போம்” எனக் கூறினார்.