விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக அரசைக் கண்டித்து சிவகாசியில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்துவிட்டு, அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன், விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“விருதுநகருக்கு மத்திய அரசின் ஜவுளிப்பூங்கா வருவதை தமிழக அரசு தடுக்கிறது. பா.ஜ.க. நடை பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். நடை பயணம் நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் தலையில் கொட்டியிருக்கிறது. தமிழக அரசுக்கு கொஞ்சம்கூட வெட்கமில்லை. மக்கள் நலனில் அக்கறையும் இல்லை. திருவள்ளுவர் பெரியவரா? கலைஞர் பெரியவரா? திருவள்ளுவரைவிட 1 அடி கூடுதலாக கலைஞருக்கு 134 அடி ஏன்? இது தமிழக அரசின் ஆணவத்தைக் காட்டுகிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை இதற்கு அனுமதிக்கக் கூடாது, அனுமதிக்காவிட்டால் நான் வரவேற்பேன்; சந்தோசப்படுவேன், 2 லட்சம் கோடி முருகப்பா குரூப் ஏன் ஆந்திரா சென்றார்கள்? இங்கிருப்பதைவிட, அங்கு எளிமையான முறை உள்ளது. வரும் முதலீட்டாளர்களிடம் ஒதுக்கீடு எவ்வளவு என்று கேட்கிறீர்கள். அந்த ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு எவ்வளவு என்று கேட்கின்றீர்கள். ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டுமென்று அஞ்சியே, முதலீட்டாளர்கள் தமிழகத்தை விட்டு அண்டை மாநிலத்திற்கு ஓடுகின்றனர்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த ஓராண்டில் எத்தனை லாக்-அப் இறப்புகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நடைபெற்றுள்ளன, இதில் திமுகவினர் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும்.” இவ்வாறு பேட்டியளித்தார்.