அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியதை அவர்கள் வெளியில் சொல்லவே இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட மசோதா நடைமுறை செயல்திட்டத்தில் இருப்பது நம்பிக்கை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். இதன்பின் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட் விலக்கு குறித்து முயற்சிகள் தொய்வில்லாமல் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கை பெற்று சட்டமன்றத்தில் சமர்ப்பித்து மசோதா நிறைவேற்றி அனுப்பி கவர்னர் ஒப்புதல் தர தாமதித்து மீண்டும் சட்டமன்றத்தைக் கூட்டி மசோதா நிறைவேற்றி கவர்னர் வேறு வழியில்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நிலையில்தான் கடந்த ஆட்சியிலும் இருந்தது. குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியதையோ உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியதையோ கடந்த அரசு தெரிவிக்கவே இல்லை. ஆனால், இன்றைக்கு குடியரசுத் தலைவர் மசோதாவை இரு துறைகளுக்கு அனுப்பியுள்ளார். சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் மசோதா அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறையும் உள்துறை அமைச்சகமும் தமிழகத்திற்கு சில விளக்கங்களைக் கேட்டு கடிதம் எழுதினார்கள். தமிழக அரசு சட்டவல்லுநர்களுடன் கலந்து பேசி அந்த இரு துறைகளுக்கும் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. எங்களுக்கு இது நடைமுறையில் இருப்பதாக நம்பிக்கை அளிக்கிறது. ஏனெனில், அனுப்பிய கடிதங்கள் நிராகரிக்கப்பட்டது என இரு துறைகளுமே இதுவரை கூறவில்லை. குடியரசுத் தலைவர் அலுவலகமும் அறிவிக்கவில்லை” எனக் கூறினார்.