Published on 10/07/2019 | Edited on 10/07/2019
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஜூன் 28ஆம் தேதியில் இருந்து சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விவாதத்தின்போது, சட்டத்துறைக்காண மானியங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ ரவி, மற்ற கட்சிகளைப் போல தாத்தா, மகன், பேரன் என வாரிசு அரசியலின் அதிமுக ஈடுபடவில்லை.

மாநிலங்களவை தேர்தலில் கூட இஸ்லாமியர் இனத்தவருக்கு இடம் ஒதுக்கி உள்ளோம் என கூறினார். அவர் கூறியது திமுக எம்எல்ஏக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ சக்கரபாணி வாரிசு அரசியல் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் பேசுவதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார். உடனடியாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நீக்க முடியாது என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய சக்கரபாணி அதிமுக எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், ராஜன் செல்லப்பா, ஜெயக்குமார் ஆகியோர் மகன்கள் அரசியலில் இருக்கிறார்களே, அவர்கள் எல்லாம் வாரிசு இல்லாதவர்கள் இல்லையா என கேள்வி எழுப்பினர். அமைச்சர் தங்கமணி இதற்கு மறுப்பு தெரிவித்து பேசினார். அதிமுக உறுப்பினர்கள் வாரிசு என்று தான் குறிப்பிட்டார்கள் திமுக என்று குறிப்பிடவில்லை என கூறினார். அதன்பிறகு சபாநாயகர் அதிமுக எம்எல்ஏக்கள் யாரையும் குறிப்பிட்டு பேச வில்லை என பிரச்சினையை முடித்து வைத்தார்.