குடியுரிமை திருத்தச் சட்டம் மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துகிறது என்று கூறி, அவற்றிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவராமக மாறியது. இந்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லி பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் "டெல்லி எரிகிறது... இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வீதிக்கு வருவேன் சொன்ன ரஜினிகாந்த் எங்கே? தொப்பி போடாத இஸ்லாமியர் டாக்டர் ராமதாஸ் எங்கே? இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி எங்கே?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி ஏரிகிறது
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) February 25, 2020
இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கபடுகிரர்கள்.
இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆள் ஆக வீதிக்கு வருவேன் சொன்ன @rajinikanth எங்கே?
தொப்பி போடாத இஸ்லாமியர் @drramadoss எங்கே?
இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி எங்கே?
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், "சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை. இந்திய முஸ்லிம்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் முதல் ஆளாக நான் குரல் கொடுப்பேன்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.