விழுப்புரம் மாவட்டத்திலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இது முதலில் வருந்தத்தக்க ஒரு விஷயம். விழுப்புரத்தில் நடந்த கரும்புள்ளி. இன்று காலை கூட இறப்பு ஏற்பட்டுள்ளது. இறப்புகள் அதிகரிப்பதால் துயரத்தை தாங்க முடியவில்லை. முதலில் கள்ளச்சந்தையில் கள்ளச்சாராயம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்களும் குடிப்பவர்களும் இது எவ்வளவு கேடு என புரிந்துகொள்ள வேண்டும். உயிர் வாழ்ந்தால் கூட கண் பார்வை போய்விடும். கொஞ்ச நேரம் போதைக்காக வாழ்க்கையை இழக்க வேண்டுமா என்றும் பார்க்க வேண்டும். எத்தனை உயரிய சிகிச்சை கொடுத்தாலும் சிலரை காப்பாற்ற முடியாத சூழல் மனதுக்கு மிக மிக வருத்தமான ஒன்று. ஆகவே இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதை எடுத்துக் கொள்பவர்கள் கூட இனிமேல் இந்த தவறான பாதைக்கு செல்லாதீர்கள் என்ற கோரிக்கையைத்தான் என்னால் வைக்க முடிகிறது.
போதைப்பொருளாக இருக்கட்டும் கள்ளச்சாராயமாக இருக்கட்டும் அனைத்தையும் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்றது, அங்கிருந்து சென்றது என கூறி நமது கடமையை தட்டிக் கழிப்பதை விட எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். புதுச்சேரியில் இருந்து வந்தது. எங்களுக்கு பொறுப்புகள் இல்லை என சொல்லி யாரும் எந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் சொல்லிவிட முடியாது. புதுச்சேரியில் அப்படிப்பட்ட சூழல் இருந்தாலும் அவை கட்டுப்படுத்த வேண்டும். இதுவரைக்கும் போதைப் பொருட்களும் தவறான வழியில் தயாரிக்கப்படும் பொருட்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வலிமையான வலுவான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.