Skip to main content

"புதுச்சேரியில் 30 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் இந்த மேடையிலே தற்கொலை செய்துகொள்வேன்" - ஜெகத்ரட்சகன் 

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

DMK MP Jagathratchekan speech at pondicherry about pondicherry assembly election


2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த சூழலில், கடந்த 6 மாதமாக புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து வந்த தி.மு.க.வினர் காங்கிரசுடன் இணக்கமாக இல்லை.

 

தொடர்ந்து சில மாதங்களாக காங்கிரஸ் அரசுக்குப் பல்வேறு விதமாக எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ‘தி.மு.க. தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம்’ என்ற முழக்கத்தோடு புதுச்சேரி தி.மு.க.வினர் செயல்பட்டு வந்த நிலையில், புதுச்சேரி நூறு அடி சாலையில் அமைந்துள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டர் என்ற தனியார் திருமண மண்டபத்தில் புதுச்சேரி மாநில தி.மு.க நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (18.01.2021) நடைபெற்றது.

 

புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில், புதுச்சேரி தி.மு.க மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி அமையும் என்றும், புதுச்சேரி காங்கிரஸ் எந்தவித நலத்திட்டங்களையும் செய்யவில்லை. புதுச்சேரி பின்னோக்கி சென்றது. அதனைப் போக்கும் வகையில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்றும் பேசினர்.

 

தொடர்ந்து தி.மு.க. மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசும்போது, "எங்கு பார்த்தாலும் கருப்பு சிவப்பு வண்ணம் தெரிகிறது. கலைஞருக்கு அதிகம் பிடித்த ஊர் புதுச்சேரி. புதுச்சேரியில் யார் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின்தான் முடிவெடுப்பார். புதுச்சேரிக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள். புதுச்சேரி மக்கள் நல்லா இருக்க வேண்டும். விவசாயம் பொய்த்து போய்விட்டது. புதுச்சேரி எவ்வளவு பெரிய கடற்கரை. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம். புதுச்சேரியில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைக்கும்” என்றார். 
 

மேலும் உச்சகட்டத்துக்கு சென்ற அவர், "புதுச்சேரியில் 30 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறவில்லை எனில் இந்த மேடையிலே தற்கொலை செய்து கொள்வேன்" எனத் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்