கலைஞரின் உடல்நலம் குறித்து கேட்டறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். கலைஞரின் நலம் விசாரித்துவிட்டு வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது, கலைஞர் போன்றோரை பலரும் கடுமையாக விமர்சித்து வரும் போக்கு குறித்த கேள்விக்கு, ‘’ என்னை விமர்சிப்பதற்காகவே பல கட்சிகள் சம்பளத்திற்கு ஆள் வைத்திருக்கிறார்கள். நான் அதை பொருட்படுத்துவதில்லை. ஆனாலும் இது போன்ற தலைவர்கள், நீண்ட காலம் அரசியலில் அர்ப்பணிப்பு செய்த தலைவர்களை விமர்சிப்பது தேவையற்றது. அடுத்தவர்களை காயப்படுத்தி மகிழ்ச்சி அடையும் நிலை ரொம்ப ஆபத்தானது. அதனால்தான் அதை நாங்க வெறுக்கிறோம். தடுக்க நினைக்கிறோம்.
அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மனித மாண்பு காக்கப்பட வேண்டியது அவசியம். ஐபிஎல் போட்டியில் போலீசை ஒருவர் தாக்கிவிட்டார். உடனே அவர் நாம் தமிழர் கட்சி என்றுவிட்டார்கள். விசாரித்தால் அவர் போன மாதம்தான் கட்சியில் சேர்ந்தார் என்கிறார்கள். வலைத்தளங்களில் கட்சியில் சேரலாம் என்று எல்லாம் கட்சியும் சொல்கிறது. எங்கோ ஒருவர் கட்சியில் சேர்ந்திருப்பார். அவர் முகம் நமக்கே தெரியாது. அவர் யார் என்ன என்ற முகவரி தெரியாது. ஆனாலும் அவர் போடுகின்ற பதிவுக்கு நாம் பொறுப்பேற்றுத்தான் ஆகவேண்டும். ஒரு துளி விஷம் கலந்துவிட்டாலும் கடல் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை இருக்கிறது. அதற்காக வருந்துகிறோம். திருத்துவதற்கு பெரு முயற்சி எடுக்கிறோம்’’என்றார்.
கலைஞருக்கு பின்னால் திமுக எனும் இந்த மாபெரும் இயக்கத்தை ஸ்டாலின் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். மாபெரும் தொண்டர்களை கொண்ட இயக்கத்தை ஸ்டாலின் முன்னின்று நடத்தி வரவேண்டும். கனிமொழியும் நடத்தி வரவேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு,
’’கனிமொழிக்கு நல்ல ஆளுமை இருக்கிறது. அவருக்கு இலக்கிய, வரலாற்று வாசிப்பு இருக்கிறது. ஆளுமை இருக்கிறது. துணிவும் இருக்கிறது. ஒரு பெண் நீண்ட காலமாக அரசியல் பணியாற்றி வருகிறார். அந்த அனுபவம் இருக்கிறது. இயல்பாக எல்லோரிடமும் பேசக்கூடிய எளிமை. இதையெல்லாம் பார்க்கும்போது அவரும் இந்த மாபெரும் இயக்கத்தை வழிநடத்தும் ஆளுமை இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.