ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இருப்பினும் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
அதே சமயம் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி (19.04.2024) நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வில் இருந்து இருந்து வெளியேறுகிறேன். மேலும் புகழேந்தி, கே.சி.பழனிசாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தொடங்க உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து புகழேந்தி பேசுகையில், “ஒ.பன்னீர்செல்வத்திற்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒ.பன்னீர்செல்வம் பயணிக்கும் திசை சரியானதாக இல்லை. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் காரணமாகவே அதிமுக ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக கே.சி.பழனிசாமி பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அதிமுகவை ஒற்றுமைப்படுத்தும் பணிகளில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு ஈடுபடும். இன்னொரு தோல்வியை தாங்க அதிமுக தொண்டர்கள் தயாராக இல்லை. அப்படி தோல்வியைச் சந்தித்தால் அதிமுக தொண்டர்கள் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.