முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் தலைமை பொறுப்பு குறித்து பல விவாதங்கள் எழுந்துவருகின்றன. அதிமுகவின் கட்சி விதியில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனும் பதவிகள் கொண்டுவந்து அதில், ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இருந்தாலும் தற்போதும் அதிமுகவின் தலைமை குறித்தான விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. அதேபோல், அதிமுகவின் தலைமைக்கு சசிகலா வரவேண்டும் எனும் குரலும் ஒரு பக்கம் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியேவந்து பிறகு முதலில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். சில சமயங்களில் அதிமுக தலைமைக் குறித்தும் கருத்து தெரிவித்துவருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று ஒரு விழாவில் கலந்துகொள்ள புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில், “சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டால் அக்கட்சி மேலும் வளரும். சசிகலா பாஜகவுக்கு வந்தால் நிச்சயம் நாங்கள் அவரை வரவேற்போம். அது எங்களுக்கு உறுதுணையாக இருக்கும். சசிகலா அதிமுகவுக்கு வரவில்லை என்றால் நாங்கள் பாஜகவுக்கு வரவேற்போம்” என்று தெரிவித்தார்.